Saturday, September 3, 2011

ராஜீவ் காந்தி படுகொலை தனுவின் நெற்றியில் இருந்த பொட்டுமீண்டும் எழும் சந்தேகங்கள்

2 comments

சொறியச் சொறிய கடித்துச் செல்லும் முடிவே இல்லாத சிரங்கு… ராஜிவ் கொலையில் எத்தனை பொட்டுக்கள்…?

மறைந்த பாராதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணம் தொடர்பாக திருச்சி வேலுச்சாமி குமுதம் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியில் இதுவரை வெளிவராத இரகசியங்கள் பலதை வெளியிட்டுள்ளார்.

ராஜீவ்காந்தியைக் கொல்வதற்கு வெடிகுண்டு கட்டிச் சென்ற பெண் என்று கூறப்படும் தனுவின் நெற்றியில் உள்ள பொட்டை முக்கிய தடயமாக அவர் முன் வைத்தார்.

வெடிகுண்டு வெடிப்பதற்கு சுமார் 15 நிமிடங்கள் முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சிவராசனுக்கு அருகில் மாலையுடன் நிற்கும் தனுவின் நெற்றியில் பொட்டு இல்லை.

வெடிகுண்டு வெடித்து சிதறிக்கிடக்கும் தனுவின் சிதறிய உடலின் நெற்றியில் பொட்டு காணப்படுகிறது. இரண்டு படங்களையும் அவர் பகிரங்கமாகக் காட்டினார். பின் முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பினார்.

பொட்டு வைத்தபடி குண்டைக் காவிச்சென்ற தனுவின் நெற்றியில் இருந்த பொட்டு குண்டு வெடிப்பில் அழிந்துவிட்டதென்றால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் இறந்த பின்னர் அவருடைய நெற்றியில் பொட்டு வந்ததென்றால் அதில் என்ன நியாயம் இருக்கப்போகிறது..?

கொலையாளி ஒரு தமிழ் பெண்தான் என்று காட்டுவதற்காக அந்தப் பொட்டு அணிவிக்கப்பட்டதா..?

இல்லை சிதறிக் கிடக்கும் உடலம் தனுவின் உடலம் இல்லாமல் வேறொரு பெண்ணின் உடலமா..?

இல்லை புகைப்படம் எடுத்த பின் தனு பொட்டு வைத்தாரா..? அப்படி வைத்தால் அந்த நேரம் அவருக்கு எங்கிருந்து வந்தது பொட்டு..?

மேலும்…

சம்பவம் நடைபெற்றபோது ஒரு ஒளிப்படம் எடுக்கப்பட்டதாகவும், அதை இன்றுவரை உள்துறை செயலராக இருந்த கே.ஆர்.நாராயணன் விசாரணைக்காக ஒப்படைக்கவில்லை என்றும், இந்த வழக்கின் மர்மமே அதில்தான் புதைந்துள்ளதாகவும், சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோர் குற்றமற்றவர்கள் என்றும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மேலும் பல கேள்விகளை அவர் எழுப்பினார்.

கேள்வி 01. அன்று ராஜீவ்காந்தி விசாரணைகளுக்கு பொறுப்பாக இருந்த ப.சிதம்பரம் அந்த விசாரணை அறிக்கைகள் முற்றாக தொலைந்துவிட்டதாகக் கூறினார்.. இது சரியா..?

கேள்வி 02. கம்யூனிஸ்டான தா. பாண்டியன் அந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர். அவர் ப.சிதம்பரத்திடம் இதுபற்றி கேட்டபோது மழுப்பலான பதிலையே கொடுத்துள்ளார் ஏன் மழுப்பினார்..?

கேள்வி 03. அரசியலை விட்டு முற்றாக ஒதுங்குவதாகக் கூறிய நரசிம்மராவ் ராஜிவ் இறந்ததும் எப்படி மறுபடியும் பிரதமரானார்..?

கேள்வி 04. கொலை நடைபெற்று விசாரணைகள் தொடங்கவில்லை அதற்குள் புலிகளே காரணம் என்று சுப்பிரமணியசாமி முடிவுகட்டி சொன்னது எப்படி..?

கேள்வி 05. சாதாரண பஞ்சாயத்து தலைவராகக்கூட இல்லாத சுப்பிரமணியசுவாமிக்கு இன்றுகூட பூனைப்படையின் பாதுகாவல் எதற்கு..?

கேள்வி 06. ராஜிவின் சொத்துக்களையும் அரசியல் பலத்தையும் அனுபவிக்கும் முக்கியமான நால்வர் இந்த விவகாரத்தில் தொடர் மௌனம் காப்பது எதற்கு..?

கேள்வி 07. இந்த விவகாரத்தின் முக்கியமான சந்தேக நபர்கள் எல்லாம் உயர்ந்த பட்டம், பதவிகளில் தொடர்ந்து நீடிப்பது எப்படி..?

கேள்வி 08. சந்திராசாமிதான் அன்றைய வெடிகுண்டு பெல்டை பூசை செய்து சிவராசனிடம் எடுத்துக் கொடுத்தார் என்ற விவகாரத்தை சொன்ன நபரை கார்த்திகேயன் ஏன் தாக்கி பற்களை உடைத்தார்?

கேள்வி 09. கார்த்திகேயன் புலிகளை மட்டும் குற்றவாளிகளாகக் காட்டுவதற்கு மேல் விசாரணைகளை முன் நகரவிடாது ஏன் தடுத்தார்..?

மேற்கண்ட ஒன்பது கேள்விகளும் மேலும் பல புதிய கேள்விகளுக்கு தூண்டுதலாக அமைகின்றன. நேற்று முன்தினம் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டபோது பேரறிவாளன் உட்பட மூவருக்கும் தூக்குத்தண்டனை வழங்கலாம் என்ற முடிவை மு.கருணாநிதியே எடுத்தார்…என்றார். அப்படியானால் அந்த முடிவை அவர் எப்படி எடுத்தார். அவருக்கு பின்னால் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இருந்தாரா..?

கேள்வி 10. விடுதலைப்புலிகள் இதில் எப்படி மாட்டுப்பட்டார்கள்..? புதுமாத்தளன் இறுதி நேரத்திலாவது இந்த உண்மையை விடுவிக்காமல் அவர்கள் ஆடுகளத்தில் இறுகிய மௌனமாக இருநத்து ஏன்..?

கேள்வி 10. தென்னாசிய அரசியலில் என்ன நடக்கிறது.. என்ன நடந்தது.. ஈழத் தமிழர்கள் இதில் ஏன் பகடைக்காய்கள் ஆனார்கள்..?


இதோ திருச்சி வேலுச்சாமியின் பேட்டியைக் கேட்டுப் பாருங்கள் :


தலைவர் வே.பிரபாகரனை தீர்த்துக்கட்ட சோனியா பிறப்பித்த ரகசிய உத்தரவு?

0 comments
http://www.eelamview.com/wp-content/uploads/2011/08/sonia-gandhi.jpgஈழத் தமிழர் பிரச்சினையில் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை சீர்குலைத்து, ராணுவ மோதலுக்கு ஊக்கப்படுத்தியது இந்தியாவும் – சோனியாவும் தான் என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன.


தமிழ்நாட்டைச் சார்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் குழு, ராஜபக்சேவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் சோனியாவும் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுபற்றி பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி.தேவசகாயம் மற்றும் ‘ஸ்டேட்ஸ்மென்’ ஆங்கில நாளேட்டின் மூத்த செய்தியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சாம் ராஜப்பா ஆகியோர் தனித்தனியாக எழுதிய கட்டுரைகள் – இணையதளங்களில் இடம் பெற்றுள்ளன.

குழுவில் இடம் பெற்றிருந்தவரும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரியுமான எம்.ஜி.தேவசகாயம் எழுதிய கட்டுரை:

அண்மையில் உலக நாடுகளையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது ‘சேனல் 4’ தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிகள். ஈழத் தமிழர்களை நிர்வாணமாக்கி, கண்களைக் கட்டி, சிங்கள ராணுவம் சுட்டுக் கொல்வதும், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவதும் இதில் இடம் பெற்றுள்ளது.

அண்மையில் இலங்கை சென்று திரும்பிய பிரிட்டிஷ் முன்னாள் வெளியுறவு அமைச்சர் டேவிட் மில்லி பாண்ட், பிரான்சு முன்னாள் வெளியுறவு அமைச்சர் பெர்னார்டு கவுச்னார் ஆகியோர், “யுத்தம் முடிந்த பிறகு, தமிழர்கள் நான்காம் தர, அய்ந்தாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகிறார்கள். வெளிநாட்டுக் கொள்கை என்று ஏதேனும் ஒன்று இருக்குமானால், உடனடியாக இந்த மோசமான மனித விரோத நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும்” என்று எழுதியிருந்தனர். இந்த கொடூரமான மனித அவலங்களுக்குப் பின்னால், இந்தியாவின் பங்கு உண்டு என்பது வெளிவராத உண்மை.

2005 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்தியாவின் விருப்பத்துக்கு மாறாக ரணில் விக்ரமசிங்கே தோற்று, ராஜபக்சே வெற்றிப் பெற்றார். ராஜபக்சேவின் வெற்றியை விரும்பாத புதுடில்லி, அவரை அங்கீகரிக்காமல், ஓரம் கட்டி, ராஜபக்சேவை ஒதுக்கி வைத்துவிட்டது.

இந்த நிலையில் தந்திரக்காரரான ராஜபக்சே, தன்னை நேர்மையாகக் காட்டிக் கொள்ளவும், இந்தியாவின் ஆதரவைப் பெறவும் விரும்பினார். அதற்காக ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை மேற்கொள்ள முயன்றார். தமிழ்நாட்டைச் சார்ந்த தமிழின உணர்வு கொண்ட மூத்த அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு ஈழத் தமிழர் அரசியல் தீர்வுக்காக இந்தியா – இலங்கை நாடுகளுக்கிடையே உறவுப் பாலமாக செயல்படுமாறு கேட்டுக் கொண்டார்.

கொழும்பிலிருந்து வந்த இந்த வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாட்டில் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரிகள், மூத்த பத்திரிகையாளர்கள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் நானும் (எம்.ஜி. தேவசகாயம்) இடம் பெற்றிருந்தேன்.

குழுவின் முதல் கூட்டம் 2007 மே மாதம் 10 ஆம் தேதி சென்னையில் நடந்தது. ராஜபக்சேவின் மூத்த ஆலோசகர் கலந்து கொண்டார். இருதரப்பினரும் ஏற்கக்கூடிய அரசியல் தீர்வுக்கான திட்டம் ஒன்றை தயாரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தமிழக அதிகாரிகள் குழு கொழும்பு சென்று 2007 ஜூலை 17 அன்று ராஜபக்சேயையும் கொழும்பு உயர் மட்ட அதிகாரிகள் குழுவையும் சந்தித்தது. ராஜபக்சே விரிவாக பேசினார். அவரது பேச்சு மிகவும் ஈடுபாட்டுடனும், ஆக்கபூர்வமாகவும் இருந்தது. தமிழக குழுவின் கருத்துகளை ராஜபக்சே முழுமையாக ஒப்புக் கொண்டார்.

பிரச்னைகளுக்கான தீர்வு முதலில் அந்த நாட்டு மக்களிடமிருந்தே உருவாக வேண்டும் என்றும், அந்தத் தீர்வுத் திட்டங்கள் சர்வதேச கருத்துகளோடு, குறிப்பாக, இந்தியாவின் கருத்தைப் பெற்று திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் கூறினோம். ராஜபக்சேயும் ஏற்றுக் கொண்டார். இந்த சந்திப்புக்குப் பிறகு, தமிழர்கள் வாழும் வடக்கு – கிழக்குப் பகுதிகளை ஒன்றாக இணைத்து, சுயாட்சி வழங்கும் திட்டத்தை ராஜபக்சே அறிக்கையாகவே வெளியிட்டார். இதைத் தொடர்ந்து தமிழகக் குழு, ராஜபக்சே அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்களையும், உயர் அதிகாரிகளையும் தொடர்ந்து பலமுறை சந்தித்து, தமிழர் பிரச்சினைகளைத் தீர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டது.

கடைசியாக, இலங்கை சட்ட அமைச்சர், ஆட்சி மொழி ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசிய பிறகு ராஜபக்சேவுடன் முக்கியமான சந்திப்பு 2008 மார்ச் 25 இல் நடந்தது. அப்போது அரசியல் தீர்வு திட்டம் ஒன்று இறுதியாக்கப்பட்டது.

உடனே, கொழும்பிலிருந்த இந்திய தூதரகம் இதை அறிந்து ஆத்திரமடைந்தது. அதன் துணை ஆணையர் ஏ. மாணிக்கம், என்னை சந்திக்க நேரம் கேட்டார். நான் தங்கியிருந்த ஓட்டலுக்கு மாலை 5 மணிக்கு வரச் சொன்னேன். ஆனால், அந்த அதிகாரி வரவில்லை. அதற்கு பதிலாக எங்களுடன் பேசிக் கொண்டிருந்த கொழும்பு அதிகாரிகள் குழுவிடம், அங்கீகாரம் இல்லாத நபர்களிடம் எப்படி பேசலாம் என்று இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்தது.

பிறகு நான், நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளை விளக்கி, பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.எ. நாயருக்கு 2008 ஏப்ரல் முதல் தேதி விரிவான கடிதம் எழுதினேன். அவர், என்னுடன் பணியாற்றிய அதிகாரி நீண்ட காலப் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு உருவாகியுள்ள இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு நான் கேட்டிருந்தேன். ஆனால், எந்த பதிலும் வரவில்லை” என்று அய்.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி மேலும் பல விவரங்களை ‘ஸ்டேட்ஸ்மென்’ ஏட்டின் ஓய்வு பெற்ற மூத்த செய்தியாளர் சாம் ராஜப்பா, தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழக குழுவினர் அரசியல் தீர்வுத் திட்டத்தை உருவாக்குவதில் வெற்றிப் பெற்ற நிலையில், இந்தியா தனது போக்கை மாற்றிக் கொண்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிராக முழு ராணுவத் தாக்குதலைத் தொடங்குமாறு, ராஜபக்சேவுக்கு பச்சைக் கொடி காட்டியது.

பிரபாகரன், உளவு பிரிவு தலைவர் பொட்டு அம்மன் ஆகியோரின் தலையை வெட்ட வேண்டும் என்றும், இதற்காக எந்த ராணுவ உதவியையும் இந்தியா வழங்கும் என்றும் சோனியா கூறினார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவித்தன. பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவு செயலாளர் சிவசங்கரமேனன், பிரதமர் அலுவலகத்தில் செல்வாக்குள்ள அதிகாரிகள் குழு ஒன்றாக இணைந்து, நாட்டின் நலனைவிட சோனியாவின் விருப்பமே முக்கியம் என்று செயல்பட்டன.

அதன் பிறகு, கொடூரமான இனப் படுகொலைகளை ராணுவம் நடத்தியது. அதுதான் ‘சேனல் 4’ வெளியிட்ட படுகொலை காட்சிகள். இலங்கையே இந்தப் புதைகுழியை வெட்டிக் கொண்டுவிட்டது. ‘சேனல் 4’ ஆவணங்களைப் பார்த்து உலக நாடுகள் எல்லாம் கண்டிக்கும்போது, இந்தியா மட்டும் எதுவுமே தெரியாதது போல் கள்ள மவுனம் சாதிப்பதற்கு காரணம் இதுதான்.

ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ராஜபக்சேவும் அவரது பரிவாரங்களும் போர்க்குற்றவாளியாக நிறுத்தப்படும்போது, புதுடில்லியும், இந்தக் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததிலிருந்து தப்பிவிட முடியாது. அதற்கான மணி ஒலிக்கத் தொடங்கி விட்டது” – என்று சாம் ராஜப்பா எழுதியுள்ளார்.

விடுதலை இராசேந்திரன்

இந்திய உளவு நிறுவனத்தின் வஞ்சகம்

0 comments

1988 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி ஜெயவர்த்தனாவைத் தொடர்ந்து, பிரேமதாசா அதிபர் பதவிக்கு வந்தார். அப்போது, வடக்கு-கிழக்கு மாநிலங்களில் இந்திய ராணுவம் நிலை கொண்டிருந்தது. ராஜீவ்-ஜெயவர்த்தனே சமரச ஒப்பந்தத்தை துப்பாக்கி முனையில் இந்திய ராணுவம் திணிக்க முயன்ற நடவடிக்கைகளால், தமிழ் மக்கள் கொதித்துப்போயிருந்தனர். யுத்த மேகம் பரவி மக்கள் அச்சத்துக்குள்ளாகியிருந்த சூழலில், வடக்கு-கிழக்கு மாகாண கவுன்சிலுக்கு இந்திய ராணுவத்தின் பார்வையில் ஒரு தேர்தல் நாடகம் அரங்கேற்றப்பட்டது.தில்லுமுல்லுகள் முறைகேடுகளுடன் நடத்தப்பட்ட தேர்தலில் – ‘ஈ.பி.ஆர்.எல்.எப்.’ இயக்கத்தைச் சார்ந்த வரதராஜப் பெருமாள், வடக்கு-கிழக்கு மாகாண முதல்வராக திரிகோணமலையில் முடிசூட்டப்பட்டார்.

ஈ.பி.ஆர்.எல்.எப்., இந்திய ராணுவத்தின் ‘செல்லப் பிள்ளையாக’ மாறி, விடுதலைப் புலிகளை ராணுவத்திடம் காட்டிக் கொடுக்கும் வேலைகளைச் செய்து வந்தது. இதனால், விடுதலைப் புலிகள் பக்கம் நின்ற ஏராளமான தமிழர்கள், வீடுகளிலும், வீதிகளிலும், இந்திய ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.

அதே நேரத்தில் இலங்கையின் தெற்குப் பகுதியில் ‘ஜெவிபி’ சிங்களர் அமைப்பு, வடகிழக்கில், இந்திய ராணுவம் நிலை பெற்றிருப்பதை எதிர்த்து, கலவரங்களில் இறங்கியது சிங்கள காவல் நிலையங்களும், அரசு அலுவலகங்களும் தாக்கப்பட்டன. இதில் 2500 பேர் வரை கொல்லப்பட்டனர். இத்தகைய பதட்டமான சூழலில் பதவிப் பொறுப்புக்கு வந்த பிரேமதாசா, நிலைமையைப் புரிந்து கொண்டு, இந்திய ராணுவத்தை வெளியேற்றிட வேண்டும் என்ற உறுதியான முடிவுக்கு வந்தார்.

பிரேமதாசா சமுதாயத்தின் கீழ் மட்டத்திலிருந்து வந்த தலைவர்; புத்தமதப் பற்று அதிகம்; தனது பதவி ஏற்பையே கண்டியில் உள்ள புத்தர் பல் இருக்கும் மடாலயத்தில் தான் நடத்தினார். இலங்கை ஒரே நாடு; அது பிரிக்க முடியாது என்ற உணர்வு கொண்டவர். பதவி ஏற்றவுடன் விடுதலைப் புலிகளையும், ஜெ.வி.பி. இயக்கத்தையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ‘இனப்பிரச்சினை எங்களின் உள்நாட்டுப் பிரச்சினை; அதில் அன்னிய சக்திகளைத் தலையிட அனுமதிக்க மாட்டோம்’ என்று சூசகமாக அறிவித்தார். லண்டனிலிருந்த விடுதலைப் புலிகளின் ஆலோசகர் பாலசிங்கத்திடம் தொடர்பு கொண்டு பேசினார் பிரேமதாசா. இந்திய ராணுவம் வெளியேறவேண்டும் என்று பிரேமதாசா வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அந்த நிலையில் விடுதலைப் புலிகளோடு இலங்கை ராணுவத்தின் போர் நிறுத்தத்தை அறிவித்தார். இந்திய ராணுவமும் புலிகளுக்கு எதிராக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

பிரேமதாசா தானாக அறிவித்த இந்த போர் நிறுத்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்க தயக்கம் காட்டினார். இந்திய ராணுவம் வெளியேறாதவரை, போர் நிறுத்தம் செய்ய முடியாது; அது தங்களுக்கு ஆபத்து என்று விடுதலைப் புலிகள் அறிவித்தனர். இதைப் புரிந்து கொண்ட பிரேமதாசா, கொழும்பு புறநகரில் கோயில் விழா ஒன்றில் பேசுகையில் – இந்திய அரசு, மூன்று மாதங்களில் ராணுவத்தைத் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்தார். அதே நாளில், இலங்கை வெளிநாட்டுத் துறை அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னே விடுதலைப் புலிகளுக்கு, பேச்சுவார்த்தைக்கு வருமாறு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்தார். புலிகள் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தனர்.

பிரேமதாசாவின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்களின் குழு – பாலசிங்கம் தலைமையில் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளோடு பேச்சு வார்த்தையைத் துவக்கியது. மனித உரிமைக்கு எதிரான இந்திய ராணுவத்தின் அடக்குமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டன. 5000 தமிழர்கள் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டதையும், அமைதிப்படை ஆக்கிரமிப்புப் படையாக செயல்படுவது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்பதையும் விடுதலைப் புலிகள் விளக்கினர். இந்தக் கருத்துகள் கூட்டறிக்கையாக வெளியிடப்பட்டபோது, பிரேமதாசா மீது இந்தியா கோபம் கொண்டது. கொழும்பிலுள்ள இந்தியத் தூதர் பேச்சு வார்த்தையில் இந்திய ராணுவ நடவடிக்கைகளை விமர்சனம் செய்வதற்குக் கண்டனம் தெரிவித்தார்.

இதற்கிடையே தெற்கு ஆசிய நாடுகளின் மாநாட்டை (சார்க்) நவம்பரில், இலங்கையில் நடத்தவிப்பதால், ஜூலை 31 ஆம் தேதிக்குள், இந்திய ராணுவத்தை திருப்பி அழைத்துக் கொள்ளுமாறு பிரேமதாசா, பிரதமர் ராஜீவுக்குக் கடிதம் எழுதினார். ஆத்திரமடைந்த ராஜீவ் காந்தி, பெங்களூரில் பேசும்போது, “ஈ.பி.ஆர்.எல்.எப். ஆட்சி நடத்தும் மாகாணக் கவுன்சிலுக்கு உரிய அதிகாரங்களைப் பெற்றுத் தந்த பிறகுதான், அமைதிப்படை வெளியேறும்” என்று அறிவித்தார். பிரேமதாசா, ராஜீவ்காந்தியின் இந்தப் பேச்சால் மிகவும் வருத்தமடைந்தார். இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைகளில் இலங்கை – இந்திய முரண்பாடுகள் பற்றியே பெரிதும் விவாதிக்கப்பட்டன. இந்த நிலையில், வரதராஜப் பெருமாள் முதலமைச்சராக இருந்த தமிழர் பகுதியில் பள்ளி மாணவர்களைக் கட்டாயப்படுத்தி, ‘தமிழ் தேசிய ராணுவம்’ ஒன்றை உருவாக்கினர். சுமார் 4500 சிறுவர்களை ‘ஈ.பி.ஆர். எல்.எப்.’ குழுவினர், பள்ளிகளிலிருந்து கட்டாயப்படுத்தி கடத்திப் போய் பல்வேறு இந்திய ராணுவ முகாமுக்குப் பயிற்சிக்கு அனுப்பினர். விடுதலைப் புலிகள் சிறுவர்களை ராணுவத்தில் சேர்ப்பதாக குற்றம் சாட்டியது இந்தியா. ஆனால் அந்தக் குற்றத்தைச் செய்ததே இந்தியா தான்!

சிறுவர்களின் பெற்றோர்கள், இந்திய ராணுவ முகாம்களின் முன்னால் திரண்டு, தங்கள் பிள்ளைகளை விடுவிக்குமாறு மன்றாடினார்கள். இந்த நிலையில் இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும், ராணுவ மோதலை நிறுத்துவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இந்திய ராணுவத்தைப் போர் நிறுத்தம் செய்ய வைப்பதற்காக, பிரேமதாசாவின் வேண்டுகோளை ஏற்று, முதலில் தயங்கிய விடுதலைப்புலிகள் பிறகு போர் நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமிடையே மோதல் நிறுத்தப்பட்டு, அமைதிக்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டதால், இந்திய ராணுவமும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்திவிட வேண்டும் என்று, பிரேமதாசா இந்திய பிரதமர் ராஜீவுக்கு கடிதம் எழுதினார். இதற்கு ராஜீவ் காந்தி அடுத்த நாளே பதில் கடிதம் ஒன்றை எழுதினார் .

பிரேமதாசா கடிதத்தால் ராஜீவ் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று விட்டார். ஆசிய நாடுகளின் முடிசூடா மன்னராக வலம் வருவதற்கு ராஜீவ் காந்தி விரும்பினார். அதன் காரணமாகத்தான் ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களின் பிரதிநிதியாக தன்னைத் தானே நியமித்துக் கொண்டு ஈழத் தமிழர் விடுதலை இயக்கத்தை ஓரம் கட்டிவிட்டு, ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அதைத் தமிழர்கள் மீது திணித்தார். வலிமை மிக்க இந்திய ராணுவத்தின் முன் இந்த சின்னஞ்சிறு நாடுகள் எல்லாம் ‘தூசு’ என்ற சர்வாதிகார மனப்போக்கில் திளைத்திருந்த ஒருவருக்கு பிரேமதாசாவின் இந்த அறிவிப்பு ஆத்திரத்தை ஏற்படுத்தாதா? பிரேமதாசாவுக்கு ராஜீவ் எழுதிய பதிலில் இந்த ஆத்திரத்தின் வெளிப்பாட்டைப் பார்க்க முடியும். இலங்கை அரசுடன் விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் செய்ய முன் வந்திருந்தாலும் அந்த போர் நிறுத்தத்தை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ராஜீவ், பிரேமதாசாவுக்கு பதில் எழுதினார்.

அமெரிக்காக்காரன் நடத்தி வரும் நாட்டாண்மையை எல்லாம் மிஞ்சக் கூடியதாக, இது இருப்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். ராஜீவ் தனது பதில் கடிதத்தில் புலிகள் போர் நிறுத்தம் செய்தால் மட்டும் போதாது. இலங்கையின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும். இலங்கை அரசிடம் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்றெல்லாம் ராஜீவ் காந்தி நிபந்தனை விதித்தார். இதற்கு அர்த்தம் பிரேமதாசாவைவிட ராஜீவுக்கு இலங்கை ஒருமைப்பாட்டில் கவலை வந்து விட்டது என்பது அல்ல. விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டும் தமது முயற்சி தோல்வியில் முடிந்ததும், பிரேமதாசா, தனது ராணுவத்தைத் திருப்பி அனுப்ப கெடு விதித்து விட்டாரே என்ற ஆத்திரமும் தான் காரணம். பிரேமதாசா, ராஜீவ் மிரட்டலுக்கு அஞ்சவில்லை.

இன்னும் ஒரு படி மேலே போய் அவர் பதிலடி தந்தார். “ஒப்பந்தப்படி இந்திய ராணுவம் எனது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. நானே இந்திய ராணுவத்தை வெளியேற உத்தரவிடுவேன்” என்று அறிவித்தார். தெற்கு ஆசியாவின் சக்தி மிக்க தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள துடித்துக் கொண்டிருந்த ராஜீவ் காந்திக்கு பிரேமதாசா விடுத்த சவாலை, ராஜீவால் செரிமானம் செய்து கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் ராஜீவ் மிரட்டலுக்கு பணிய மறுத்த விடுதலைப் புலிகளை ஒழிப்பதில் தீவிரம் காட்டி செயல்பட்டு வந்த உளவுத் துறையின் கவனம், பிரேமதாசாவின் பக்கம் திரும்பியது. பிரேமதாசாவுக்கு எதிரான திட்டங்களை உளவுத் துறை உருவாக்கத் தொடங்கியது. விடுதலைப் புலிகளுக்கு பச்சைக் கொடி காட்டினார்கள். தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆயுதங்கள் தரத் தயாராக இருப்பதாகவும், பிரேமதாசாவை எதிர்த்து போராட்டத்தைத் தொடங்கினால், இந்தியா விடுதலைப் புலிகள் பக்கம் நிற்கும் என்று விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு தூது அனுப்பினார்கள். ஆனால், இந்திய சதி வலையில் சிக்கிட பிரபாகரன் தயாராக இல்லை. பிரபாகரன் இத்திட்டத்தை நிராகரித்து விட்டார்.

V.RAJENDRAN

இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று நீங்கள் கேட்கலாம். ஆதாரங்களுடன் தான் ஒவ்வொரு கருத்தையும் நான் உங்கள் முன்னால் கூறிக் கொண்டிருக்கிறேன். நான் கூறிய இந்தக் கருத்துகளுக்கு சாட்சியாக நான் நிறுத்த விரும்புவது மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனைத் தான்.

முரசொலி மாறன் அப்போது தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினர். பிரேமதாசா – ராஜீவ் முரண்பாடு முற்றியிருந்த நேரத்தில் ராஜீவ் முரசொலி மாறனை அழைத்துப் பேசினார். இது பற்றி முரசொலி மாறனே இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் விரிவாகக் கூறுகிறார். இதோ முரசொலி மாறன் பேட்டி:

“இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டபோதே அதை எதிர்த்தவர் பிரேமதாசா. இவர் இலங்கை அதிபர் ஆனதும் இந்திய அமைதிப் படையை வெளியேற்றச் சொன்னார். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு, இந்தியப் படைக்கு எதிராக புலிகளுக்கு ஆயுதம் வழங்கினார். பிரேமதாசா – பிரபாகரன் நெருக்கம் அதிகமாவதைக் கண்ட இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி என்னை (முரசொலி மாறன்) அழைத்துப் பேசினார். பிரபாகரனுக்கு நாம் உதவிகள் செய்யலாம். புலிகள் பற்றி உண்மை நிலவரம் எனக்கு தெரியாமல் போய் விட்டது. எனவே தமிழக முதல்வர் கருணாநிதியை புலிகளுடன் பேசச் சொல்லுங்கள். சுதந்திர தமிழ் மாநிலம் அமைக்க நாம் உதவலாம் என்று கூறினார். நான் (முரசொலி மாறன்) இப்போதே அவர்கள் சுதந்திர தனி மாநிலமாகத்தான் உள்ளனர். வரி வசூல் வரை நீதிமன்றம் வரை நிர்வாகம் செய்கிறார்கள் என்றேன். உடனே ராஜீவ் காந்தி சிரித்தபடி தமிழ் ஈழத்தின் பிதாமகர் தி.மு.க. தான் என்றார்.” (‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ 16.12.1997)

முரசொலி மாறன் அளித்த இந்தப் பேட்டி, விடுதலைப்புலிகளை ஒழிப்பதைக் கூட நிறுத்திக் கொண்டு அவர்களிடம் சமரசம் பேசி ஆயுதம் வழங்கி, பிரேமதாசாவுடன் மோத விடும் நிலைக்கு ராஜீவ் வந்தார் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது. ஆக, விடுதலைப் புலிகளைவிட பிரேமதாசா ராஜீவ் காந்தியின் முதன்மையான எதிரியாகக் கருதும் நிலைக்கு ராஜீவ் காந்தி வந்து விட்டார். அதற்கேற்ப உளவு நிறுவனமும் ‘காய்’களை நகர்த்தியது.

ஒரு முக்கியமான செய்தியை சுட்டிகாட்ட வேண்டும். பிரேமதாசா கொழும்பு புறநகர்ப் பகுதியான பட்டாரமுல்லா என்ற இடத்தில் 1989 ஆம் ஆண்டு ஜூன் முதல் தேதி பேசும் போது இந்திய ராணுவம் இலங்கையிலிருந்து ஒரு மாத காலத்துக்குள் அதாவது ஜூலை 29 ஆம் தேதிக்குள் வெளியேறிட வேண்டும் என்று கெடு நிர்ணயித்து அறிவித்தார். (ஜூலை 29 – என்ற தேதிக்கான முக்கியத்துவம் ராஜீவ் – ஜெயவர்த்தனா ஒப்பந்தம் அமுலுக்கு வந்த தேதி என்பதாகும்). ராஜீவ் காந்தியும் இந்திய உளவு நிறுவனமும் பிரேமதாசாவின் இந்த ‘கெடு’வால் அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்கள் இதை சற்றும் எதிர்பார்க்க வில்லை.

அவசர அவசரமாக இந்திய உளவு நிறுவனம் பிரேமதாசாவுக்கு எதிரான சதித் திட்டங்களை உருவாக்கியது. என்ன திட்டம்?

1. இந்திய ராணுவம் வெளியேறக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தும், ராஜீவ் – ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை பிரேமதாசா கை விடுவதை எதிர்த்தும், தமிழர் பகுதியில் தங்களின் ‘கைத்தடி’ அமைப்பிலிருந்து ஆட்களைப் பிடித்து பிரேமதாசாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்த இந்திய உளவு நிறுவனம் ஏற்பாடு செய்தது.

2. விடுதலைப் புலிகள் தாக்கும் நிலையில் பலமாகவே உள்ளார்கள் என்றும், இந்திய ராணுவம் இப்படிப்பட்ட நிலையில் வெளியேறக் கூடாது என்றும், விடுதலைப் புலிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பிரேமதாசாவின் இலங்கை ராணுவத்துக்குக் கிடையாது என்றும் சில சம்பவங்களை உருவாக்கி உணர்த்த வேண்டும் என்று திட்டங்களை வகுத்தனர். தமிழ் ஈழத்தில் ‘இந்தியாவின் தலையீடு’ என்ற விரிவான நூலை (Indian Intervention in Srilanka) ரோகனா குணரத்னா என்ற கொழும்பு பத்திரிகையாளர் எழுதியுள்ள இந்த நூலில் இந்திய உளவு நிறுவனத்தின் மேற்குறிப்பிட்ட திட்டங்களை அவர் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

விடுதலைப் புலிகள் வலிமை குறையாதவர்கள் என்றும், அவர்கள் தலைவர்களைக் கொலை செய்யக் கூடியவர்கள் என்றும் பிரேமதாசா இந்திய ராணுவத்தை வெளியேறச் சொல்லும் கருத்துக்கு கடும் எதிர்ப்பை உருவாக்கிவிடலாம் என்ற திட்டத்தின் கீழ் சில கொலைகளுக்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டன. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள்ளேயே இந்திய உளவு நிறுவனத்தின் வலையில் சிக்கியிருந்த மாத்தையாவின் அணி, இதற்காக, களமிறக்கப்பட்டது.

பிரேமதாசா இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என்று ஒரு மாதம் கெடு விதித்து அறிவித்த நாள், 1989 ஜூன் 1, கெடு முடியும் நாள் ஜூலை 29. இந்த ஒரு மாத இடைவெளியில் தான் சில முக்கிய தலைவர்கள் கொலை செய்யப்பட்டு, அவர்களை கொலை செய்தவர்கள் விடுதலைப்புலிகள்தான் என்ற பழியை சுமத்தி ஊடகங்கள் வழியாக பரப்பினர். எந்தத் தேதியில், யார் யார் கொல்லப்பட்டார்கள்?

1989 ஜூலை 12 – தமிழர் அய்க்கிய விடுதலை முன்னணி தலைவர்கள் அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன்.

1989 ஜூலை 17 – அதாவது, அடுத்த நான்கு நாட்களில் புளோட் இயக்கத் தலைவர் உமா மகேசுவரன்.

1989 ஜூலை 23 – அடுத்த 10 நாட்களில் ‘பிரபாகரன்’ மாத்தையால் கொல்லப்பட்டார் என்ற அறிவிப்பு (அனைத்து இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்களில் உயிருடன் இருந்த பிரபாகரன் – மாத்தையாவால் கொல்லப்பட்டதாக இந்திய உளவு நிறுவனம் செய்திகளைப் பரப்பியது).

பிரேமதாசா – இந்திய ராணுவம் வெளியேற கெடு விதித்த ஒரு மாத கால இடைவெளியில் மட்டும், இந்தக் கொலைகள் நடந்தன என்றால், அதன் நோக்கம், மூளை, பின்னாலிருந்து இயக்கிய சக்திகளைப் புரிந்து கொள்ள முடியும்.

(தொடரும்)

விடுதலை இராசேந்திரன்

நன்றி கீற்று இணையம்

-------------------------------------------------------------------------------------------

http://www.keetru.com

ராஜீவ் கொலை வழக்கில் மாத்தையாவை சேர்க்காதது ஏன்?

0 comments

இந்திய உளவு நிறுவனம் விரித்த வலையில் மாத்தையா வீழ்ந்தார் என்று விடுதலைப் புலிகள் இயக்கம் உறுதியான முடிவுக்கு வந்தது. அதற்கு அழுத்தமான காரணங்கள், சூழ்நிலை சந்தர்ப்பங் களின் அடிப்படையிலான சான்றுகள் ஏராளம் இருக்கின்றன. ராஜீவ் சர்மாவின் இந்த நூல் மாத்தையா மீது எந்தக் குற்றமும் இல்லாதது போலவும், பிரபாகரன், அவரை சித்திரவதை செய்து கொன்றார் என்றும் அபாண்டமாக குற்றம் சாட்டுகிறது. நூலாசிரியர் இவ்வாறு எழுதுகிறார்:

“பிரகாகரன் ஆயுதமேந்திய சகப் போராளி களுடன் கூட இரக்கமற்ற முறையில் நடந்து கொள் வார். 1980-க்கும் 1990-க்கும் இடைபட்ட காலத்தில் சக தமிழ் இயக்கங்களைச் சார்ந்த 300 போராளிகளை மற்றும் எல்.டி.டி..ஈ. இயக்கத்திற்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த பல முக்கிய தலைவர்களைக் கொன்றார். இது சம்பந்தமாக நடந்த மிக அதிர்ச்சி கரமான சம்பவம் மாத்தையாவின் கொலையாகும். பிரபாகரன் மாத்தையாவை இரட்டை வேடம் ஆடுகிறார் என நினைத்தார். மாத்தையா கொடுத்த தகவலின் பேரிலேயே எச்.வி. அகத் கப்பல் (கிட்டு வந்த கப்பல்) அழிக்கப்பட்டது என்ற தகவல் பரவியது. ஏராளமான வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களை ஏற்றி வந்த அக்கப்பல் அழிக்கப்பட்டதால் எல்.டி. டி.ஈ.க்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. மாத்தையா துரோகி என குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்; தனிச் சிறையில் அடைக்கப்பட் டார்” (பக்.174) என்றெல்லாம் எழுதுகிறார் நூலாசிரியர்.

மாத்தையா மீது சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு வீண் பழியை சுமத்தியது போலவும், கிட்டு வந்த கப்பலை மாத்தையா காட்டிக் கொடுத்தார் என்று, ஆதாரம் ஏதுமின்றி தகவல்களைப் பரப்பினார் என்றும் இந்த நூல் பதிவு செய்கிறது. மாத்தையா ஒரு வருட காலம் விசாரணைக் கைதியாக இருந்த போதும் சரி, பிறகு அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டபோதும் சரி, மாத்தையாவை பிரபாகரன் சந்திக்கவே இல்லை என்றும் நூல் குற்றம் சாட்டுகிறது. இதையெல்லாம்விட மாத்தையாவுக்கு மரண தண்டனை வழங்கியதற்கு பிரபாகரனுக்கு ‘உள்நோக்கம்’ உண்டு என்ற முடிவுக்கும் நூலாசிரியர் வருகிறார். இவ்வாறு எழுதுகிறார்:

“மாத்தையாவின் கதை முடிந்து விட்டது. ஆனால், மாத்தையா உண்மையிலேயே இரட்டை வேடம் ஆடினாரா அல்லது அவர் மிகப் பலம் பொருந்திய வராக உருவானதால் பிரபாகரன் அவரை அழித்தாரா என்பது யாருக்கும் தெரியாது” என்று ‘யாருக்கும் தெரியாத’ ஒரு உண்மையை தனக்கும் தெரியாத ஒன்றை, பிரபாகரனை களங்கப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு நஞ்சை கக்குகிறார், இந்நூலாசிரியர். பிரபாகரனை இழிவுபடுத்தி, அவரது மாண்பையும் கவுரவத்தையும் நேர்மையையும் களங்கப்படுத்தும் உளவுத் துறையின் எண்ணத்தை அப்படியே பிரதிபலிக்கிறார் நூலாசிரியர்.

மாத்தையாவுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டதைத் தொடர்ந்து ‘இந்தியா டுடே’ வெளியிட்ட சிறப்புக் கட்டுரை ஒன்றை சுட்டிக்காட்ட விரும்பு கிறேன். இத்தனைக்கும் ‘இந்தியா டுடே’ புலிகளின் ஆதரவு பத்திரிகை அல்ல; மாத்தையா இந்தியாவின் வலையில் வீழ்ந்தார் என்பதை, இந்த செய்தி உறுதிப்படுத்துகிறது. 1994 ஆம் ஆண்டு ‘இந்தியா டுடே’ இதழில் (மார்ச் 16) அதன் செய்தியாளர்கள் எழுதிய விரிவான கட்டுரையிலிருந்து ஒரு முக்கிய பகுதி இது.

“1993 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி – சர்வதேசக் கடலில் சென்று கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் ‘எம்.வி. அகத்’ கப்பலை – இந்தியாவின் கடலோரப் பாதுகாப்புப் படை சுற்றி வளைத்தபோது, கப்பலில் இருந்த, விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதி கிட்டு, கப்பலுக்குத் தீ வைத்துக் கொண்டு, தன்னைத் தானே அழித்துக் கொண்டார். கிட்டு கப்பலில் வரும் தகவலை இந்திய உளவு நிறுவனத்துக்கு முன்கூட்டியே தந்தது மாத்தையாவும், யோகி யோக ரத்தினமும் தான் என்று பிரபாகரன் குற்றம் சாட்டினார். 1989 – 90 இலங்கை அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் அரசியல் தீர்வுக்கு மாத்தையா உடன்பட வேண்டும் என்று கூறியதை, பிரபாகரன் ஏற்கவில்லை. இந்தக் கருத்து வேறுபாடு, மேலும் தீவிரமடைந்தது தொடர்ந்து 1991-ல் நடந்த ஆணையிரவு தாக்குதலில் கிடைக்க வேண்டிய வெற்றி, கடும் பின்னடைவை சந்தித்தது. இதற்குக் காரணம் மாத்தையாவே என்று குற்றம் சாட்டினார் பிரபாகரன். தொடர்ந்து 1992 மே மாதத்தில் மாத்தையாவுக்கு தரப்பட்ட பொறுப்புகளி லிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து நவம்பரில் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு அருகே பிரபாகரன் தங்கியிருந்த மறைவிடம், குண்டுவீச்சுக்கு உள்ளானது. புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அவரது உதவி யாளர் 1993 ஜன.7-ல் கொல்லப்பட்டார். அடுத்த பத்து நாட்களில் ஜனவரி 16-ல் கிட்டு வந்த கப்பல் இந்திய கப்பல் படையால் சுற்றி வளைக்கப் பட்டது. மாத்தையாவும், அவரது பழைய நண்பரான என்ஜினியர் என்று அறியப்பட்ட மாணிக்கவாசகம் என்பவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். மாத்தையாவின் ஆதர வாளர்கள் 120 பேர் கைது செய்யப்பட்டனர். விடுதலைப்புலிகளின் ராணுவ நீதிமன்றம் – 1993 டிசம்பர் 19 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் கிட்டுவின் மரணத்துக்குக் காரணமானவர் மாத்தையா தான் என்றும், ‘ரா’ (சுயறு) உளவு நிறுவனத்தோடு சேர்ந்து பிரபாகரனை கொல் வதற்கு மாத்தையா சதித் திட்டம் தீட்டினார் என்றும், ‘ரா’வின் முகவராக மாத்தையா செயல் பட்டார் என்றும் புலிகளின் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது”.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

1992 ஆம் ஆண்டில் மாத்தையா புலிகள் இயக்கப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுகிறார். 1989 ஆம் ஆண்டிலிருந்தே புலிகள் இயக்கத்தில் மாத்தை யாவின் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் குழு ஒன்று இந்தியாவின் உளவு நிறுவனத்துடன் ரகசிய தொடர்பில் செயல்படத் தொடங்கிவிட்டது.

1991 ஆம் ஆண்டு ஆனையிரவில் நடந்த முதல் தாக்குதலில் புலிகள் கடும் பின்னடைவைச் சந்திக்க நேர்ந்தது. 123 பெண் புலிகள் உட்பட 573 புலிகள் இந்தப் போரில்தான் உயிர் பலியானார்கள். இயக்கத் துக்குள்ளே மாத்தையா நடத்திய சதிதான் இதற்குக் காரணம் என்ற தகவல் புலிகளின் உளவுப் பிரிவு கண்டறிந்து பிரபாகரனுக்கு தெரிவித்தது. பொறுப்பு களிலிருந்து மாத்தையா விடுவிக்கப்பட்டவுடன், யாழ்ப்பாண மருத்துவமனைக்கு அருகே பிரபாகரன் தங்கியிருந்த ரகசியமான மறைவிடம் குண்டுவீச்சுக்கு உள்ளானதோடு பொட்டு அம்மான் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதில் அவரது உதவியாளர் பலியாகி யுள்ளார். மாத்தையாவிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. 1993 ஜனவரியில் கிட்டுவின் உயிர்த் தியாகத்தை தொடர்ந்து மாத்தையா தலைமையிலான விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்ற புலிகளின் அரசியல் பிரிவு கலைக்கப்படுவதோடு துணைத் தலைவர் என்ற 2 ஆம் நிலையிலிருந்து மாத்தையா நீக்கப்பட்டவுடன் பிரபாகரனுக்கு எதிராக வெளிப்படையாகவே போர்க்கொடி உயர்த்தினார் மாத்தையா. அப்போது கொக்குவில் என்ற பகுதியில் விடுதலைப் புலி ஆலோசகர் பாலசிங்கம் தங்கியிருந்தார். அவரது வீட்டுக்குப் போன மாத்தையா, அங்கே தாம் பிரபாகரனை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப் போவதாக அறிவித்தார். இதை அடேல் பாலசிங்கம் தனது நூலில் சுட்டிக்காட்டியுள்hர்.

பிரபாகரனின் மெய்க்காப்பாளராக இருந்த ஒரு விடுதலைப்புலி தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் வேலூர் சிறையிலிருந்து உளவுத் துறை உதவியுடன் ரகசியமாக விடுவிக்கப்பட்டார். பிரபாகரனை கொல் வதற்கு வேலூர் சிறையிலே திட்டங்கள் தயாரிக்கப் பட்டு, அதனடிப்படையிலேதான் விடுதலை செய்யப் பட்டார் என்ற அதிர்ச்சியான தகவல் மாத்தையா விடம் நடத்திய விசாரணையிலிருந்து தெரிய வந்தது. மாத்தையாவின் கொழும்புப் பயணங்களும் இந்திய உளவுத் துறை அதிகாரிகளுடன் அவருக்கிருந்த தொடர்புகளும் விசாரணையில் வெளி வந்தது.

இங்கே நான் எடுத்துக்காட்டிய ‘இந்தியா டுடே’ கட்டுரையில் கடைசியாக கூறப்பட்ட, இரண்டு வாக்கியங்கள் மிகவும் முக்கியமானதாகும். “பிரபாகரன் இனிமேல் தான் மிகக் கடுமையான சோதனைகளை எதிர்க்கொள்ளப் போகிறார் என்ற கருத்தில் உளவு நிறுவனம் மிகவும் திருப்தியடைந் திருந்தது” (Indian intelligent agencies are convinced, he (Prabhakaran) is facing his toughest test yet); அதாவது மாத்தையாவின் துரோக நடவடிக்கைகள் தொடங்கியதற்குப் பிறகு, அவரது கீழறுப்பு நட வடிக்கைகள் வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கை யில் உளவுத் துறை திளைத்திருந்தது என்று எழுதி யிருப்பதிலிருந்தே உளவுத் துறையுடன் மாத்தை யாவுக்கு உள்ள தொடர்பு உறுதிப்படுத்தப்பட் டுள்ளது. கடைசியாக, ‘ரா’ உளவு நிறுவனத்துக்கு “மாத்தையா சிறந்த சொத்துதான் என்றால், மாத்தையாவின் மர்மமான நடவடிக்கைகள் மேலும் அதிகமாகலாம்! – (But if Mahathya was indeed a ‘RAW’ asset, there might be more to Mahathya mystery” – India Today) – இந்தியா டுடே கட்டுரையின் இந்த இறுதி வாசகம் மாத்தையா ‘ரா’ உளவு நிறுவனத்தின் வலையில் சிக்கியதை உறுதிப்படுத்துகிறது.

இவை எல்லாவற்றையும்விட மற்றொரு முக்கிய செய்தியை சுட்டிக்காட்ட வேண்டும். 1991 ஆம் ஆண்டு ராஜீவ் கொலை நடக்கிறது. அப்போது பிரபாகரனுக்கு அடுத்த இரண்டாம் நிலை தலைவர் மாத்தையா; 1992 ஆம் ஆண்டு, இந்திய உளவுத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்கிறது. அதில் பிரபாகரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். ஆனால் இரண்டாம் நிலை தலைவராக இருந்த மாத்தையாவின் பெயர் குற்றப் பத்திரிகையில் இடம் பெறவில்லை. இந்திய உளவுத் துறை அவர் பெயரை மட்டும் விட்டு விடுகிறது; ஏன்? 1989 ஆம் ஆண்டில் மாத்தையா பிரபாகரனை சுட்டுக் கொன்றுவிட்டார் என்ற செய்தியை உளவுத் துறை வெளியிட்டு, அதை ஊடகங்கள் பரப்பியதையும், 1994 ஆம் ஆண்டு வெளிவந்த ‘இந்தியா டுடே’ கட்டுரையையும் ராஜீவ் கொலை வழக்கில் மாத்தையாவின் பெயர் சேர்க்கப்படாததையும் இணைத்துப் பார்த்தால் மாத்தையா இந்திய உளவுத் துறையின் சதியில் வீழ்ந்து விட்டார் என்ற முடிவுக்கே வர முடியும். இவ்வளவு பின்னணிகளையும் மறைத்து ராஜீவ் சர்மாவின் இந்த நூல், மாத்தையா தன்னைவிட செல்வாக்குள்ள தலைவராக வளருகிறார் என்ற காரணத்தால், பிரபாகரன் மாத்தையாவுக்கு மரண தண்டனை விதித்திருக்கலாம் என்ற சந்தேகத்தைக் கிளப்புவது, என்ன நியாயம்? என்ன நேர்மை? பிரபாகரனை தீர்த்துக் கட்டுவதற்கு இந்திய உளவுத் துறையால் உருவாக்கப்பட்டவரே மாத்தையா என்ற உண்மையை மறைத்து பிரபாகரன் மீதே குற்றம் சாட்டும் இந்த நூலாசிரியர், கண்மூடித்தனமாக ஈழத்தில் நடந்த கொலைகள் எல்லாவற்றையும் விடுதலைப் புலிகள் தான் செய்தனர் என்று எந்த ஆதாரமும் இன்றி குற்றக் கூண்டில் ஏற்றி விடுகிறார்.

இலங்கை அதிபர் பிரேமதாசா, தமிழ் அய்க்கிய விடுதலை கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம், புளோட் இயக்கத் தலைவர் முகுந்தன், இலங்கையின் ராணுவ அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னே என்று இவர்கள் அனைவரையும் விடுதலைப் புலிகள் கொலை செய்தார்கள் என்று இந்த நூல் திரும்ப திரும்ப குற்றம்சாட்டுகிறது. விடுதலைப் புலிகள்தான் இந்தக் கொலைகளை செய்தார்கள் என்பதற்கு எந்த ஒரு சான்றையும் முன் வைக்கவில்லை. உளவுத் துறை கட்டவிழ்த்துவிட்ட பொய்யுரைகளை அப்படியே திரும்பவும் ‘கிளிப்பிள்ளை’ போல மீண்டும் மீண்டும் கூறுகிறார், நூலாசிரியர். இந்த வீண்பழிகளை நம்மால் ஆதாரங்களுடன் மறுக்க முடியும்.

முதலில் பிரேமதாசா பிரச்சினைக்கு வருவோம்; பிரேமதாசா பதவிக்கு வந்த காலம் – சூழ்நிலை எத்தகையது? இதை நாம் பார்க்க வேண்டும்.

- தொடரும்

விடுதலை இராசேந்திரன்

நன்றி கீற்று இணையம்

-------------------------------------------------------------------------------------------

http://www.keetru.com

ராஜீவ் கொலை – காங்கிரஸ் ஆட்சி அழித்த கோப்புகள்

0 comments
ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்….’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் தொகுப்பு.

சவுக்குப் பதிப்பகத்தின் முதல் வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்த நூலை வெளியிடும் வாய்ப்பை எனக்கு வழங்கிய சவுக்கு பதிப்பகத்துக்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். 1998 ஆம் ஆண்டு ராஜிவ் சர்மா எழுதிய ‘Beyond the Tigers’ என்ற நூலை ஆனந்தராஜ், மிகச் சிறந்த நடையில் விறுவிறுப்பாக தமிழாக்கம் செய்துள்ளார். நூலின் பதிப்புரையில் குறிப்பிட் டுள்ளவாறு, “முடிவடையாத ஒரு விசாரணையின் அடிப்படையில் 7 பேர் 21 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் இருப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம்?………. சிறைக் கொட்டடியில் இருப்பவர்களின் பக்கம் மக்களின் கவனத்தைத் திருப்பினால், அதுவே இப்புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி” என்று எழுதியிருப்பதுபோல் நல்ல தமிழின உணர்வோடு, நல்ல நோக்கத்தோடு தான் இந்த நூல் வெளி யிடப்பட்டிருக்கிறது. சவுக்கு இணையதளத்தின் முகப்பிலேயே தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் படம்தான் கம்பீரமாக காட்சி தரும். இந்நூலை வெளியிட்ட சவுக்கு பதிப்பகத்தின் உணர்வு – நோக்கம் மிகவும் மதிக்கத்தக்கது என்பதில் இரண்டுவித கருத்துகளுக்கு இடமில்லை.

ஆனால், என்னுடைய வருத்தமெல்லாம் – இந்த நோக்கத்துக்கு இந்த நூலின் உள்ளடக்கம் பயன்படுமா என்பது பற்றித்தான். இந்த நூலின் மய்யமான கருத்தை இப்படிக் கூறலாம். அதாவது ராஜீவ் காந்தியை கொலை செய்தது விடுதலைப் புலிகள்தான் என்று உறுதி செய்கிறது இந்த நூல். அந்தக் கொலைக்குப் பின்னால், சில சர்வதேச சக்திகள் இருந்தன. அந்த சர்வதேச சக்திகளுக்காக விடுதலைப் புலிகள் இந்தக் கொலையை செய்து முடித்துவிட்டு, அதற்கு பிரதிபலன்களாக சக்தி வாய்ந்த கப்பல்களையும் ஆயுதங்களையும் பெற்றுக் கொண்டார்கள். ராஜிவ் காந்தி கொலைக்குப் பிறகுதான் புலிகளுக்கு கப்பல்களில் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் வரத் தொடங்கின. ‘கூலிப் படைகள்’ என்பதுபோல் விடுதலைப் புலிகள் இதில் செயல்பட் டிருக்கிறார்கள். எனவே வழக்கை மறு விசாரணைக்கு உட்படுத்தி, இந்த சதியில் ஈடுபட்டவர்களையும் விசாரணை நடத்த வேண்டும் என்பதே இந்நூலின் மய்யக் கருத்து. எனவேதான் “விடுதலைப்புலிக.ளுக்கு அப்பால்…”; என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இந் நூலுக்கு ராஜீவ் கொலை நடந்தபோது மத்திய புலனாய்வுத் துறையின் இயக்குனராக இருந்த விஜய்கரன் என்ற அதிகாரியே முன்னுரை எழுதியிருப்பதை சுட்டிக் காட்ட வேண்டும். அவர் இந்த நூல் ஒரு போலீஸ் டைரியைப் போல் இருப்பதாக குறிப்பிடுகிறார். போலீஸ் டைரியைப்போல் என்பதைவிட, காவல்துறை டைரியிலிருந்தே அப்படியே பிரதி எடுக்கப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும். ஆக, புலனாய்வுத் துறையில் ஈடுபட்டிருந்த ஒரு அதிகாரியே இந்த நூலை உருவாக்குவதில் பெரும்பங்கு கொண்டிருப்பார் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. நூலின் பின் இணைப்புகளாக தரப்பட்டுள்ள ஆவணங்கள் புலனாய்வுத் துறை தொடர்பானவைகளாகவே உள்ளன. நூலின் முதல் 8 அத்தியாயங்கள் விடுதலைப் புலிகள் ராஜிவ் கொலைக்கு சதித் திட்டம் தீட்டியதையும், அதை நடத்தி முடித்ததையும் மிக மிக விரிவாக எழுதுகிறது.

அந்த அத்தியாயங்களில் விடுதலைப் புலிகள் மீது மிக மிக மோசமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் படுகின்றன. தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் கொச்சைப்படுத்துவதையே நோக்க மாகக் கொண்டு சிலர் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களின் நோக்கத்துக்கு இந்த நூல் வலிமையான சான்றாகிவிடும் என்ற கவலையால் நான் இதை மறுக்கவேண்டிய நிலையில் இருக்கிறேன். தமிழ் ஈழத்தின் விடுதலைக்காக மாவீரர்களை களப்பலி யாக்கி, கரும்புலிகளை உருவாக்கி, உலக விடுதலை இயக்கங்களாலே மிகவும் மதிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தமிழ் ஈழ விடுதலையையும் ஆதரித்து நீண்டகாலமாகவே களத்தில் நின்று கடமையாற்றியவர்கள் என்ற முறையில் இதை மறுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் எங்களுக்கு உண்டு.

ராஜீவ் கொலையில் அன்னிய சக்திகளின் பங்களிப்பை நாம் மறுக்கவில்லை. அவர்களின் பங்களிப்பு மூடி மறைக்கப்பட்டுவிட்டதை நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டி எழுதியுள்ளோம். 1998 ஆம் ஆண்டு நான் எழுதிய ‘ராஜீவ் கொலையில் மறைக்கப்பட்ட உண்மைகள்’ என்ற நூல் ‘26 தமிழர் உயிர்க் காப்பு வழக்கு நிதிக் குழு’வால் வெளியிடப் பட்டு தமிழகம் முழுதும் பல்லாயிரக்கணக்கில் பரப்பப்பட்டது. ‘தொடர்ந்து ராஜீவ் கொலையில் பதுங்கி நிற்கும் சாமிகள்’ என்ற தலைப்பில் நான் எழுதி, பெரியார் திராவிடர் கழக சார்பில் வெளி யிடப்பட்ட நூலில் சுப்ரமணியசாமி, சந்திரா சாமி களுக்கு இதிலுள்ள தொடர்புகள் அம்பலப்படுத்தப் பட்டது. அவர்கள் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் நமக்கு கருத்து வேறுபாடு கிடையாது. அதைத் தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறோம்.

ராஜீவ் கொலை தொடர்பாக மூன்று விசாரணைகள் நடந்தன. ஒன்று – கார்த்திகேயன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை. இந்த விசாரணையின் அடிப்படையில் தான் 7 தமிழர்கள் 21 ஆண்டுகளாக சிறையில் வாடுகிறார்கள். அதில் 3 பேர் தூக்குத் தண்டனையை எதிர் நோக்கி இருக்கிறார்கள். மற்றொன்று – ராஜீவ் மரணமடைந்த 7 நாட்களில் ராஜீவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்ததா என்பதைக் கண்டறிய உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில், 1991 ஆம் ஆண்டு மே 27 ம் தேதி அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், ஓராண்டு காலத்தில் இந்த விசாரணை ஆணையம் தனது பணியை முடித்து 1992 ஜூன் மாதம் அரசிடம் பரிந்துரையை தாக்கல் செய்தது.

இந்த ஆணையம் நியமிக்கப்பட்டபோது பிரதமராக இருந்தவர் சந்திரசேகர். சுப்ரமணியசாமி சட்ட அமைச்சர். அறிக்கையை தாக்கல் செய்த போது காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நரசிம்மராவ் பிரதமர். மத்திய மாநில அரசின் புலனாய்வுப் பிரிவுகளையும், தமிழகப் போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இந்த ஆணையம் கடுமையாகக் .குறை கூறியது. அது மட்டுமல்ல, ராஜீவ் மரண மடைந்த திருப்பெரும்புதூர் கூட்டத்துக்கு வந்திருந்த காங்கிரசாரையும் கடுமையான வார்த்தைகளால், விமர்சனம் செய்திருந்தது. அங்கே காங்கிரசார், பொறுப்புணர்வோ, ஒழுங்கோ இல்லாதவர்களாக செயல்பட்டுள்ளனர் என்கிறது அந்த அறிக்கை. மூன்றாவதாக நியமிக்கப்பட்டதுதான் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயின் ஆணையம். நீதிபதி சர்மா பாது காப்பு குறைபாடுகள் பற்றித் தான் தம்மால் விசாரிக்க முடியுமே தவிர, சதித் திட்டம் பற்றி தம்மால் விசாரிக்க முடியாது என்று மறுத்து விட்டார். இந்த நிலையில் ராஜீவ் கொலைக்குப் பின்னால் நடந்த சதி, பின்னணி காரணங்கள் தொடர்புள்ள தனி நபர்கள், நிறுவனங்கள் பற்றி நீதிபதி ஜெயின் ஆணையம் விசாரணை நடத்தியது. 12 முறை கால நீட்டிப்புப் பெற்று 6 ஆண்டுகாலம் விசாரணை நடத்திய இந்த ஆணையம், கடைசியில் அவசர அவசரமாக இடைக்கால அறிக்கை ஒன்றை மட்டும் சமர்ப்பித்து விட்டு ஒதுங்கிக் கொண்டது. ராஜீவ் கொலைக்கு விடுதலைப்புலிகள் மற்றும் தி.மு.க. ஆட்சியைக் குற்றம் சாட்டியதோடு, தமிழ் நாட்டு மக்களையும் குற்றவாளிகளாக அதன் அறிக்கை கூறியது – இது கடும்புயலைக் கிளப்பியது.

ராஜீவுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் படவில்லை என்று வர்மா ஆணையம் கூறிய பிறகு, அப்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததற்கு யார் காரணம்? அவர்கள் மீது, ராஜீவுக்காக கண்ணீர் வடிக்கும் காங்கிரஸ் கட்சி, நடவடிக்கை எடுத்ததா என்றால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது மட்டுமல்ல, நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது ராஜீவ் கொலை விசாரணை தொடர்பான மிக முக்கியமான கோப்புகள் காணாமல் போய்விட்டன. அப்படி காணாமல் போன கோப்புகளை ஆதாரங்களுடன் அப்போது ‘அவுட் லுக்’ ஏடு (24.11.1999 இதழ்) பட்டியலிட்டுக் காட்டியது.

1) 1989 நவம்பரிலிருந்து ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அதிகாரிகள் எழுதிய குறிப்புகளைக் கொண்ட கோப்பு பிரதமர் அலுவலகத்திலிருந்து 1991 ஆம் ஆண்டிலிருந்து காணாமல் போய் விட்டது. (8-1-WR/JSS/90/volIII) ஜெயின் ஆணையம் இந்தக் கோப்பை கேட்டபோது கோப்பைக் காண வில்லை. பிறகு பொய்யாக, ஒட்டு வேலைகள் செய்து ஒரு கோப்பை தயாரித்து, ஆணையத்தின் முன் சமர்ப்பித்தார்கள். இந்தக் கோப்புகளை எழுதிய அதிகாரிகளில் ஒருவர் வினோத் பாண்டே இவர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது அமைச்சரவை செயலாளராக இருந்தவர். ஜெயின் ஆணையத்தின் முன் சாட்சியமளித்த அந்த அதிகாரி, கோப்புகளைப் பார்த்து அதிர்ச்சி யடைந்து, இந்தக் கோப்புகளில் தான் எழுதிய குறிப்புகள் இடம் பெறவில்லை; இவை திருத்தப் பட்டவை என்றார். அப்போது உள்துறையில் துணை அமைச்சராக இருந்தவர், இப்போது ‘இளம் தலைவர் ராஜீவு’க்காக கண்ணீர் வடிக்கும் ப. சிதம்பரம்தான். கோப்புகள் திருத்தி, ஒட்டி, போலியாக தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட் டுகள் எழுந்ததைத் தொடர்ந்து ஜெயின் ஆணை யம் உள்துறை அமைச்சகததை அழைத்துக் கேட்டது. ப. சிதம்பரம் கூண்டில் ஏற்றி, ‘ஆம் கோப்புகளை புதிதாக தயாரித்தது உண்மைதான்’ என்று ஒப்புக் கொண்டார். இவர்கள் தான் ராஜீவ் மரணத்துக்கு குடம் குடமாக கண்ணீர் வடிக் கிறார்கள்.

2) நீதிபதி வர்மா மற்றும் நீதிபதி ஜெயின் விசாரணை ஆணையத்துக்கான வரம்புகளை நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் அடங்கிய மற்றொரு கோப்பு 1995 ஆம் ஆண்டு முதல் காணாமல் போய் விட்டது. (கோப்பு எண்.1/120/14/5/911/A.S./DIII).

3) சந்திரசாமி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ர மணியசாமி ஆகியோருடன் வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் தொடர்பு கொண்டு பேசியபோது, இடைமறித்துக் கேட்கப்பட்ட உரையாடல் களைப் பதிவு செய்த கோப்பை பிரதமர் அலு வலக மூத்த அதிகாரிகளே அழித்து விட்டனர்.

4) 1987 ஆம் ஆண்டு பிரதமர் ராஜீவ் காந்திக்கும், அன்றைய குடியரசுத் தலைவர் ஜெயில்சிங்குக்கும் இடையே மோதல் உருவானது. இந்திரா சுட்டுக் கொல்லப்பட்டவுடன், அப்போது எந்தப் பொறுப்பிலும் இல்லாத ராஜீவுக்கு பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைத்து, நாட்டின் பிரதமராக்கியதே அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ஜெயில் சிங் தான். பதவி அதிகாரத்துக்கு வந்த ராஜீவ் – அதிகார மமதை யில் குடியரசுத் தலைவர் அலுவலகத்தையே அவ மதிக்கத் தொடங்கிய நிலையில் ஒரு கட்டத்தில், குடியரசுத் தலைவரே ராஜீவ் ஆட்சியைக் கவிழ்க்கும் நடவடிக்கைகளில் இறங்கினார். அப்போது குடியரசுத் தலைவர் ஜெயில் சிங்கும், சர்வதேச ஆயுதத் தரகரும், சாமியாரும், சுப்ர மணியசாமி நண்பருமான சந்திரசாமியும், மேற் கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகள் பற்றி இந்திய உளவு நிறுவனம் (i.b.) கண்டறிந்த உண்மைகளும், பரிந்துரைகளும் கொண்ட கோப்புகளும் காணாமல் போய் விட்டன.

நரசிம்மராவின் குருவாக செயல்பட்டவர் சந்திர சாமி. பிரதமராக இருந்த சந்திரசேகரின் குருவும் சந்திரசாமிதான். அன்னியச் செலவாணி மோசடி, தொடர்பாக பல வழக்குகளில் சிக்கியவர். சர்வதேசப் புள்ளிகளுடன் நெருக்கமான உறவு கொண்டவர். இவர் ஒரு பார்ப்பனர். நேர்மையான பொது வாழ் வுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்கை களங்கப்படுத்தும் நோக்கத்தோடு, வி.பி.சிங் மகனுக்கு செயின்ட் கிட்ஸ் எனும் தீவில் ரகசிய வங்கிக் கணக்கு இருப்பதாக, ஒரு போலி ஆவணத்தைத் தயாரித்து, அன்றைய பிரதமர் நரசிம்ம ராவிடம் வழங்கி, வி.பி.சிங் மகனை கைது செய்ய இவர் முயற்சித்தார். இதற்கு பார்ப்பனர் நரசிம்ம ராவும் உடந்தை. பிறகு, அது போலி ஆவணம் என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதால், கிரிமினல் வழக்குக்கு உள்ளாகி நீண்டகாலம் டெல்லி திகார் சிறையில் அடைபட்டிருந்தார் இந்த சந்திரசாமி. ராஜீவ் கொலை தொடர்பாக – ஜெயின் ஆணையம், இந்த சந்திரசாமி, சுப்ரமணிய சாமிகளை விசாரணை நடத்தியது. ஆனால் இவர்களின் சதிச் செயல்களுக்கு ஆதாரமான பல அரசுக் கோப்புகள், நரசிம்மராவ் ஆட்சியில் அழிக்கப்பட்டு விட்டன. இந்த செய்தி களையெல்லாம் ‘அவுட்லுக்’ பத்திரிகை ஆதாரங் களை முன் வைத்து எழுதியதை நான் எழுதிய “ராஜீவ் படுகொலையில் மறைக்கப்பட்ட உண்மைகள்” நூலில் 1998 ஆம் ஆண்டில் பதிவு செய்துள்ளேன்.

ராஜீவ் சர்மாவின் இந்த நூல் பிரபாகரனை ஈழத்துக்குள் சென்று ஏன் பிடித்து வந்து விசாரிக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பி, “இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப் பாட்டுக்கும் மிரட்டல்விடுக்கும் தீவிரவாத இயக்கத் தலைவர் பிரபாகரனைப் பிடிக்க, ஏன் புதுடில்லி தைரியமான வெளிப்படையான தாக்குதலைத் தொடங்கக் கூடாது?” (பக்.319) என்று கடும் கோபத்துடன் கேள்வி எழுப்புகிறது. ராஜீவ் கொலையில் நடந்த அன்னிய சதியை பிரபாகரனே மறைப்ப தாகவும், எனவே செயற்கைக் கோள் வசதியைப் பயன்படுத்தி பிரபாகரனைப் பிடித்து வர வேண்டும் என்றும் இந்த நூல் வலியுறுத்துகிறது.

‘எனது இந்தியா உயர்வானது’ என்று முழக்கத்தைத் தந்து நாட்டுக்கே கவுரவத்தைத் தந்த தலைவர் ராஜீவ் மரணத்தால் இந்தியாவின் கவுரவமே அந்தரத்தில் ஊசலாடுவதை (பக்.318) எப்படி பொறுத்துக் கொண்டிருக்க முடியும் என்று ஆவேசமாக ‘தேச பக்தி’ பேசுகிறது.

ராஜீவ் கொலையில் அன்னிய சக்திகளின் தலையீடு இருந்தது என்பது வேறு; அன்னிய சக்திகளின் கூலிப் படையாக விடுதலைப் புலிகள் செயல்பட்டார்கள் என்பது வேறு. இந்த நூல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது, அப்படி ஒரு இழிவான பழியை வெளிப்படையாகவே சுமத்துகிறது. இந்திய உளவுத் துறையும், ஊடகங்களும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராக பரப்பிவரும் ஆதாரமற்ற அவதூறுகள் அத்தனையும் இந்த நூலில் இடம் பிடித்துள்ளன. இந்த அவதூறு களையும் குற்றச்சாட்டுகளையும் உரிய ஆதாரங்களோடு நம்மால் மறுக்க முடியும்.

- (தொடரும்)

- விடுதலை இராசேந்திரன்

நன்றி கீற்று இணையம்

-------------------------------------------------------------------------------------------

http://www.keetru.com