Wednesday, November 3, 2010

ராஜீவ் காந்தி : மனித உணர்ச்சியே இல்லாத பிண்டமா?

0 comments
1984 நச்சு வாயுப் படுகொலைகள் வழக்கில் போபால் வழக்குமன்றத் தீர்ப்பு வந்தவுடன் நாடே கொந்தளித்துப் போனது. அக்கோரச் சம்பவம் நடந்து கால் நூற்றாண்டுக்கும் மேலாகிறது. அன்று போபாலில் என்ன நடந்தது; எப்படி நடந்தது; எவ்வளவு பேரழிவும் துயரமும் நிகழ்ந்தது என்று இன்று கேள்விப்படும் புதிய தலைமுறையினரின் நெஞ்சிலே எழும் முதற்கேள்விகள் இவைதாம்: இத்தனைக்கும் காரணமான குற்றவாளி யார்? அவனுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது?

ராஜீவ் காந்தி : மனித உணர்ச்சியே இல்லாத பிண்டமா?

இவ்வழக்கில் முதன்மைக் குற்றவாளியான யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சன் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பின்னரும் எந்தவிதத் தண்டனையும் விதிக்கப்படவில்லை. ஏனென்றால், அவர் மீதான வழக்கில் விசாரணையே இதுவரை நடைபெறவில்லை. போபால் ஆட்கொல்லி ஆலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யத் தவறியவன்; செய்யப்பட்டிருந்த சில பாதுகாப்பு ஏற்பாடுகளையும் லாபவெறி காரணமாக முடக்கிப் போட்டவன்; நேரம் குறித்து வெடிக்கும் குண்டு வைப்பதைப் போல பழைய – காலாவதியான தொழில் நுட்பத்தையும் கருவிகளையும் கொண்டு வந்து நிறுவியவன். அவனா இதற்குக் காரணம் என்று கேட்கலாம்.

ஆம்! ஆலை லாபகரமாக ஓடினால் மட்டும் எல்லாம் என் அறிவுத் திறமையினால்தான் என்று சம்பளத்தை வாரிக் கொள்பவன்தானே அதன் பேரழிவுச் செயலுக்கும் பொறுப்பேற்க வேண்டும்!

அப்பேரழிவு நிகழ்ந்த ஓரிரு நாட்களில் போபால் வந்திறங்கிய வாரன் ஆண்டர்சனை மக்களின் ஆத்திரத்தில் இருந்து பாதுகாப்பதற்காக, கைது என்ற பெயரில் அரசு சொகுசு மாளிகையில் காவலில் வைத்தார்கள். உடனடியாகவே பிணையில் விடுவித்து, அரசு விமானத்திலேயே புதுதில்லி அழைத்துப் போ, அரசு அதிகாரிகளுடன் விருந்தளித்து அமெரிக்காவுக்கு வழியனுப்பி வைத்தார்கள்.

இதைச் செய்தது யார்? இதற்கு யார் பொறுப்பு? கட்டபொம்மனின் வாரிசுகள் தமது மூதாதையரின் செயலுக்கு உரிமை பாராட்டிக் கொள்ள முடியும்! எட்டப்பனின் சந்ததியினர் அவனது காரியத்துக்கு பரம்பரை உரிமை பாராட்டிக் கொள்ள முடியுமா? அப்படித்தான் நடக்கிறது.

ஆண்டர்சன் தப்பிப் போனதற்கு தாம் காரணமில்லை என்று கை விரிக்கிறார்கள். மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரசு ஆட்சி. புதுதில்லியில் பிரதமர் ராஜீவ் காந்தி. போபாலில் முதல்வர் அர்ஜுன் சிங். ஆண்டர்சனை அரசு சொகுசு மாளிகை காவலில் வைத்து, தனது அரசு விமானத்தில் வழியனுப்பி வைத்தவர் அர்ஜுன் சிங். அதை அவர் இன்றும் பெருமையுடன் ஒப்புக் கொள்கிறார். ஆனால், அவரை விடுதலை செய்யுமளவுக்குத் தமக்கு அதிகாரம் இல்லை; மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து தொடர்ந்து தொலைபேசி மூலம் வலியுறுத்தப்படுவதாக தலைமைச் செயலர் சொன்னார்; அதனால்தான் புதுதில்லிக்கு ஆண்டர்சனை அனுப்பி வைத்தேன் என்றார், அர்ஜுன் சிங்.

புதுதில்லியிலிருந்து வாரன் ஆண்டர்சனை அமெரிக்காவுக்கு பாதுகாப்பாக அர்ஜுன் சிங் அனுப்பி வைத்திருக்கவும் முடியாது. அப்படி யாரும் இன்று வரை கூறவும் இல்லை. அப்படிச் செய்ய அவருக்கு அதிகாரமும் இல்லை. ஆனால், “ஆண்டர்சன் கைது, விடுதலை மற்றும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது – இவை எதிலும், எவ்விதப் பங்கும் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்குக் கிடையாது. நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களுக்காக பிரச்சாரப் பயணத்தில் இருந்த அவருக்கு நடந்தவை எதுவும் தெரியாது” என்று காங்கிரசுக்காரர்கள் எல்லாம் முதலில் ஒருசேர அடியோடு மறுத்து வந்தார்கள்.

நாட்டில் இவ்வளவு பெரிய பேரழிவு நிகழ்ந்திருக்கிறது! இதற்குக் காரணமான முதன்மைக் குற்றவாளியைக் கைது செய்து, பின்னர் விடுதலை செய்து, பாதுகாப்பாக நாட்டைவிட்டுத் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். இவை எதுவும் பிரதமர் ராஜீவுக்குத் தெரியாது என்றால், இவை எதுவும் தெரியாத ஒருவருக்கு இந்த நாட்டை ஆளுவதற்கு என்ன உரிமை இருக்கிறது? பிரதமராக இருப்பதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது? இவ்வளவுதான் மக்கள் மீதும், நாட்டின் மீதும் அவருக்கிருந்த அக்கறையா? அல்லது இவையெதுவும் ராஜீவுக்கு தெரியாது என்பது பச்சைப் பொய்யா?

ராஜீவ் காந்தி : மனித உணர்ச்சியே இல்லாத பிண்டமா?

ராஜீவ் காந்தி : மனித உணர்ச்சியே இல்லாத பிண்டமா?

வாரன் ஆண்டர்சன்


வாரன் ஆண்டர்சனின் விவகாரத்தை அன்று புதுதில்லியில் கையாண்டவர்கள் இரண்டு அதிகாரிகள்: ஒருவர் ராஜீவ்காந்தி அரசில் பொறுப்பேற்றிருந்த வெளியுறவு அமைச்சகச் செயலாளர் ரஸ்கோத்ரா. மற்றவர் ராஜீவ்காந்தியின் தனிச் சிறப்புச் செயலாளர் பி.சி. அலெக்சாண்டர். “ஆண்டர்சன் இந்தியா வரலாம், வந்தால் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பப்படுவார் என்று அமெரிக்கத் துணைத் தூதர் மூலம் உறுதியளிக்கப்பட்டது. அவ்வாறே நடந்தது. நடப்பவை பற்றி ராஜீவ்காந்திக்கு சொல்லப்பட்டது. அவர் மறுப்போ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை” என்கிறார் ரஸ்கோத்ரா.

“(இந்திய) அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்துப் பேசித்தான் எல்லாம் முடிவு செய்யப்பட்டன. அக்கூட்டத்தில் ராஜீவும் கலந்து கொண்டார்” என்கிறார், அவரின் தனிச் சிறப்புச் செயலாளர் பி.சி. அலெக்சாண்டர். ரஸ்கோத்ராவின் கூற்றுக்கு மறுப்புச் சொல்லாத காங்கிரசார், குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக நின்ற அலெக்சாண்டர் கூறுவதை ஏற்க முடியாது என்றனர்.

மன்மோகன், சோனியா, ராகுல் ஆகிய அதிகார பீடாதிபதிகள் போபால் விவகாரம் குறித்து இன்றும் வாயை இறுக மூடிக் கொண்டிருக்கின்றனர். எதிர்க்கட்சிகளும், செய்தி ஊடகங்களும் திரும்பத் திரும்ப வலியுறுத்திய பிறகு, அர்ஜுன் சிங்கிற்கு அரசியல் மறுவாழ்வளிப்பது என்ற ஒப்பந்தத்தின் பேரில் திடீரென்று ஒருநாள் நாடாளுமன்றத்தில் அவர் வாய் திறந்தார்.

“போபால் நச்சு வாயு துயரம் நடந்த கொஞ்ச நேரத்தில் ராஜீவ் காந்தி தங்கியிருந்த ஹர்தாவுக்கு போ நான் அவரிடம் அதுபற்றி விளக்கிச் சொன்னேன். அவர் எந்தப் பதிலும் பேசாது நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டார். ஆண்டர்சனுக்கு ஆதரவாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அவரது பிரச்சினைக்குத் தீர்வு காணவும் முயலவில்லை. ராஜீவைப் போன்று உயர்நிலையிலும் உயர் தரத்திலும் உள்ள ஒருவரைக் குறை கூறுவது வெறும் கற்பனையாகும்… ஆண்டர்சனை விடுவிக்கும்படி உள்துறை அமைச்சகத்திலிருந்து இடைவிடாமல் தொலைபேசியில் வலியுறுத்தப்பட்டது” என்றார், அர்ஜுன்சிங்.

அர்ஜுன் சிங்கின் இந்தக் கூற்றை காங்கிரசார் மறுக்கவில்லை. என்றாலும் அவர்கள் விரும்புவதைப் போல இந்த பிரச்சினைக்கு அது முடிவு கட்டவில்லை. ஆனால், தவிர்க்கவே முடியாத சில கேள்விகள் மனிதச் சிந்தனை உள்ளவர்களிடையே எழும்புகிறது. ஒரு அந்நியக் கம்பெனியின் நாசகாரச் செயலால் சொந்த நாட்டு மக்கள் – குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று அப்பாவி மக்கள் – ஆயிரக்கணக்கானோர் சில நிமிடங்களில் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இலட்சக்கணக்கானோர் ஊனமுற்று மருத்துவமனைகளில் கிடக்கிறார்கள். இவற்றைக் கேள்விப்படும் எந்த மனிதரும் எப்படி வெறுமனே கேட்டுக் கொண்டிருக்க முடியும்? ஏதோ நடந்துவிட்டுப் போகட்டும் என்று தன் வேலையைப் பார்க்கப் போவிட மாட்டார்கள். உணர்ச்சியுள்ள எந்த மனிதருக்கும் நெஞ்சம் பதைபதைக்கும். ஆனால், நடந்த சம்பவங்களை முதன் மந்திரி பிரதமரிடம் விளக்குகிறார். இவரோ எவ்வித எதிர்வினையும் தெரிவிக்காமல் கேட்டுக் கொள்கிறார். இக்கோர நிகழ்வுகளுக்காகத் துயரப்படவில்லை, மனம் இரங்கவும் இல்லை. காரணமானவர்கள் மீது ஆத்திரமும் வரவில்லை. இவர் மனிதப் பிறவிதானா? இல்லை, உணர்ச்சியே இல்லாத மனிதப் பிண்டமா?

இந்தக் கேள்விகள் முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி, இடதுசாரிகள் உட்பட எந்த ஓட்டுக்கட்சிக்கும் எழவில்லை. செய்தி ஊடகங்களுக்கோ, அரசியல் விமர்சகர்களுக்கோ எழவில்லை. ஏன்? அதற்குமேல் அவர்கள் போக விரும்பவில்லை. இறந்து போனவர்களை விமர்சிக்கக் கூடாது; ஒரு வரம்புக்கு மேல் எந்த ஒரு அரசியல் கட்சியையும், அதன் தலைவர்களையும் அரசியல் அமைப்பையும், சட்டத்தையும் கேள்வி கேட்கக் கூடாது என்று இவர்களாகவே வரம்பிட்டுக் கொள்கிறார்கள். “தேசியத் தலைவர்கள்” என்ற பிம்பத்தை உருவாக்கி, கேள்விக்கும் விமர்சனத்துக்கும் அப்பாற்பட்ட தலைவர்கள், நிறுவனங்கள் என்று சிலரையும், சிலதையும் வைத்து பாதுகாப்பு அரண்களை எழுப்பிக் கொண்டார்கள். அதனால்தான் போபால் விவகாரத்திலேயே துரோகத்தனமான தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்தை யாருமே தட்டிக் கேட்க வில்லை. இதை அடிப்படையாகக் கொண்டுதான் ராஜீவ் ஒரு உயர்ந்த தலைவர்; அவரைக் களங்கப்படுத்தும் வகையில் எதுவும் பேசக் கூடாது என்று காங்கிரசு வாதிடுகிறது.

அர்ஜுன் சிங் நாடாளுமன்றத்தில் பேசிய அடுத்த நாளே, போபால் – ராஜீவ் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக எண்ணிப் பாசிச பயங்கரவாதி சிதம்பரம் பேசினார். ஆனால், அதுவே அவரது அயோக்கியத்தனத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது. “போபால் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை ஆட்சி புரிந்த எல்லா அரசாங்கங்களும் கைவிட்டு விட்டன; அதற்காக வருந்துகிறேன்” என்று முதலைக் கண்ணீர் வடித்தார், சிதம்பரம். எல்லோரும்தான் தவறு செய்தோம் என்று முதலாம் துரோகி மற்ற துரோகிகளைச் சேர்த்துச் சொல்வதன் மூலம் இதற்கு மேல் யாரும் யாரையும் குற்றஞ் சாட்டாதீர்கள் என்று எச்சரிக்கிறாரா? சமரசம் பேசுகிறாரா? எல்லோரும்தான் தவறு செய்திருக்கிறோம் என்று தவறை ஒப்புக் கொள்வதுபோல பாசாங்கு செய்து தம் மீதான குற்றச்சாட்டின் கூர்முனையை மழுங்கடிக்க எத்தணிக்கிறாரா?

“போபால் சம்பந்தமாக அரசின் நடவடிக்கைகள் குறித்து ஆதாரங்கள் எதுவும் அரசிடம் இல்லை. ஆண்டர்சன் வந்து போனதாகக் கூட அரசு ஆவணங்களில் ஆதாரம் இல்லை. அக்காலத்திய பத்திரிக்கைச் செய்திகளை வைத்துதான் முடிவு செய்ய வேண்டும். அப்போதைய இந்து நாளேட்டின் செய்திப்படி, ஆண்டர்சன் நாட்டை விட்டுப் போன பிறகுதான் நடந்தவை ராஜீவுக்குத் தெரிந்தன” என்றார், பாசிச புளுகுணி சிதம்பரம். ஆண்டர்சன் வெளியேறுவதற்கு முன்பாக ராஜீவுக்கு சொல்லப்பட்டது என்றுதான் அக்காலத்திய இந்து நாளேடு செய்தி கூறியது. இதை இந்து நாளேடு செய்தியாளரே ஆதாரத்துடன் கேட்டபோது, அது இந்து நாளேட்டின் கருத்து என்று மீண்டும் புளுவிவிட்டு ஓடிப்போனார் சிதம்பரம்.

ஆக, ஆண்டர்சன் வருகை முதல் பாதுகாப்பாக நாடு திரும்பியவரை எல்லாம் ராஜீவுக்குத் தெரிந்தே நடந்திருக்கிறது. இதற்கு இந்து நாளேடு செய்தி, ரஸ்கோத்ரா, அலெக்ஸாண்டர், அர்ஜுன் சிங் ஆகிய சாட்சியங்கள் உள்ளன. ஆண்டர்சன் திருப்பி அனுப்பப்பட்டதில் ராஜீவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று காங்கிரசார் வாதிட்டாலும், அதுபற்றி அவருக்குச் சொல்லப்பட்டபோது ராஜீவ் மறுக்கவில்லை, எதிர்க்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்கள். இதற்கும் மேலாக, ராஜீவ் அரசாங்கம்தான் ஆண்டர்சனை அனுப்பி வைக்கும் முடிவு செய்ததாக சி.ஐ.ஏ. ஆவணமும் ஆண்டர்சனைப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று அன்றைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் ராஜீவிடம் தொலைபேசியில் வலியுறுத்தினார் என்ற ஆதாரங்களும் வெளியாகியுள்ளன.

மன்னர் ஆட்சிக் காலத்தில் நீண்டநெடிய மதிற்சுவர்களுக்குப் பின்னே அரசியல் சதிகள் தீட்டப்பட்டன, இரகசியமாக நிறைவேற்றப்பட்டன. வெளியே தெரிந்தாலும், அரசின் இரகசியங்களை அறிந்தவர்கள் அனைவரும் அரசருக்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டியதாகச் சிரச்சேதம் செய்யப்பட்டார்கள். இந்தக் காலத்தில் கருப்புப் பூனைப் படைகளின் பாதுகாப்போடு சதித் திட்டங்கள் தீட்டப்பட்டு, அடாவடியாக நிறைவேற்றப்படுகின்றன. பிற விவகாரங்களில் கேள்வி கேட்பவர்களைத் தேசவிரோத சக்திகள் என்று குற்றஞ்சாட்டி ஒடுக்குவதைப் போல, ஆண்டர்சன் விடுதலை போன்ற விவகாரங்களில் அப்படிச் செய்ய முடியாது. எனவே, நடந்தவை பற்றிய ஆதாரங்கள், ஆவணங்கள் எல்லாம் அழிக்கப்படுகின்றன; அல்லது காணாமல் போகும்படி செய்யப்படுகின்றன.

ஆனால், நடந்தவை எல்லாம் ராஜீவ் தலைமையிலான அரசின் திட்டமிட்ட முன்னேற்பாடுகள், சதிச் செயல்கள் தாம். தன் பங்கு பற்றி வெளியே தெரியக்கூடாது என்பதற்காக அர்ஜுன் சிங் போன்ற அல்லக்கைகள் – எடுபிடிகளை வைத்து நிறைவேற்றப்பட்டவைதாம்.

மக்களுடைய கடுமையான ஆத்திரத்துக்கு உள்ளாவோம் என்று அஞ்சும் விவகாரங்களில் எல்லாம் ஆட்சியாளர்கள் தமது அல்லக்கைகளை வைத்து காரியங்களைச் செய்வதும், தாம் ஏதும் அறியாதவர்களைப் போல வாய்மூடிக் கொண்டிருப்பதும் புதிதல்ல. ஈழ விவகாரத்தில் கூட பிரணாப் முகர்ஜி, சிவசங்கர மேனன், நாராயணன் போன்றவர்களே முன்நிறுத்தப்பட்டார்கள். மன்மோகனும் சோனியாவும் வாயே திறக்கவில்லை.

அதைப் போல ஆண்டர்சன் தப்புவிக்கப்பட்ட விவகாரத்தில் ராஜீவ் அரசால் முன்னிறுத்தப்பட்டவர்களைத் தான் கை காட்டுகிறார்கள். ராஜீவ்காந்தியின் பங்கு பற்றிய உண்மை தெரியக்கூடாது என்பதற்காக அரசு ஆவணங்கள், ஆதாரங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. அப்போது நடந்தவை பற்றிய ஆதாரம் எதுவுமில்லை என்கிறார் சிதம்பரம். அக்காலத்திய பிரதமர் அலுவலகத் தொலைபேசி உரையாடல் பற்றிய விவகாரங்களை தரும்படி தகவல் அறியும் சட்டப்படி கேட்டவருக்கு, அதுபற்றிய விவரம் எதுவும் தம்மிடம் இல்லை என்று அடியோடு மறுக்கிறது அரசு. ராஜீவின் தாய் நடத்திய அவசர கால ஆட்சி (1975-76) பற்றிய தகவல் – விவரம் எதுவும் தன்னிடம் இல்லை என்றும் இந்த அரசு கூறுகிறது என்பது வேறொரு விசயம்சி.

ராஜீவ் காந்தியின் ஆட்சியே இப்படிப்பட்டதுதான். அர்ஜுன்சிங் முன்னின்று போடப்பட்ட ராஜீவ் – லோங்கோவால் பஞ்சாப் ஒப்பந்தம், ராஜீவ் – அசாம் கன பரிசத் ஒப்பந்தம், ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போன்ற இரகசிய ஒப்பந்தங்களும், சதித்தனமான வேலைகளும் நிறைந்ததுதாம். ராஜீவ் அரசியல் வாழ்வே போபார்ஸ் ஊழல், டில்லி சீக்கியர் படுகொலை, ஏன், ராஜீவ் கொலையே கூட தீர்வு காணப்படாத மர்மங்கள் நிறைந்தவைதாம்!

வினவு
புதிய ஜனநாயகம், அக்டோபர், 2010

0 comments:

Post a Comment