Wednesday, November 3, 2010

இனி ராஜீவ் காந்தியின் ஆன்மா சாந்தி அடையுமா?

0 comments
ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ராஜீவ் கொலை, எனவே ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுப்போர் அனைவரும் புலி ஆதரவாளர்கள். எனவே அது தேசத்துரோகம் அல்லது ராஜத்துரோகம் அல்லது பிரிவினைவாதம்” – 1991 முதல் இன்று வரை ஈழத்தமிழர்கள் மீதான எல்லா அடக்குமுறைகளையும் நியாயப்படுத்த இந்த எளிய வாய்ப்பாடுதான் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது.

ராஜீவ்-காந்தி-கொலை


ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதற்கு மட்டுமின்றி, தமிழக மக்களின் மொழி, இன உரிமைகளை நசுக்குவதற்கும் பார்ப்பனக் கும்பலின் கையில் கிடைத்திருக்கும் ஆயுதம் ‘ராஜீவ்’. “பயங்கரவாத எதிர்ப்பு” என்ற பெயரில் தனது உலக மேலாதிக்க நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு புஷ்ஷுக்குக் கிடைத்த 9/11 கூட இன்று கிழிந்து கந்தலாகிவிட்டது. ஆனால் ராஜீவ் எனும் இந்த ஆயுதம் மட்டும் 17 ஆண்டுகள் கடந்த பின்னரும் முனை மழுங்காமல் தமிழ் மக்களுக்கு எதிராகப் பாய்ந்து கொண்டே இருக்கிறது. காரணம், அதனை யாரும் எப்போதும் திருப்பித் தாக்கியதில்லை என்பதுதான்.

இன்று கூட (21.05.09) ராஜீவின் இறந்த நாள் என்பதற்காக நாளிதழ்களில் பல பக்க விளம்பரம், அவரது கனவை நனவாக்குவோம் என்ற உறுதி மொழியோடு வந்திருக்கிறது. ஈழத்தை சுடுகாடாக்கிவிட்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் காங்கிரசு கயவாளிகள், இப்போது புலிகளை முற்றாக இலங்கை அரசுடன் இணைந்து வீழ்த்திவிட்டோம் என்ற இறுமாப்பு இந்த விளம்பரங்களில் துருத்துகிறது.

ராஜீவ் கொலை குறித்த பிரச்சினை எழுப்பப் படும்போதெல்லாம், “அதனை மறந்து விடக்கூடாதா, மன்னித்து விடக்கூடாதா” என்று மன்றாடுகிறார்கள் பல தமிழுணர்வாளர்கள். ஆனால் இந்த ராஜதந்திரம் பார்ப்பனக் கும்பலிடம் இதுவரை பலிக்கவில்லை. பிரபாகரன் மரணமடைந்து விட்டதாக கொழும்பில் சிங்கள மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் இங்கே ஆங்கில செய்தி சேனல்களும் அதே உணர்வுடன் கொண்டாடினர். ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்றும், இனி அந்த வழக்கு முடிகிறது என்றெல்லாம் மகிழ்ச்சியுடன் அலசினர். ராஜீவ் கொலை வழக்கு முடிந்துவிட்டதாக அவர்கள் கருதுவது சட்டப்படியும், அறத்தின்படியும் சரியானாதா? இந்தியாவில் ராஜீவ் ஆட்சி செய்தபோதும், இலங்கையில் ராஜீவ் அமைதிப்படை அனுப்பியபோதும் நடந்த படுகொலைகளுக்கு யார் காரணம்?

இந்திய அமைதிப்படையால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான ஈழத்தமிழ் மக்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் யார்? அந்தக் கொலைமுயற்சியில் உயிரிழந்த 1300 இந்திய சிப்பாய்களின் மரணத்துக்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் யார்? போபால் விசவாயுப் படுகொலைக்காக, டெல்லி சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்காக தண்டிக்கப்படாதவர்கள் யார்? அயோத்தியைக் கிளறி இந்துப் பாசிசப் பேய்க்கு உயிர் கொடுத்தது யார்? இந்தக் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டியது யார்?

மேற்சொன்ன கேள்விகளை யாரும் எப்போதும் எழுப்பியதில்லை. எனவே மகாத்மா காந்தி, இந்திரா காந்தி ஆகியோருடன் தேசியப் புனிதர்களின் படவரிசையில் ராஜீவ் காந்தியும் சேர்ந்து விட்டார்.

‘மரித்தவர்களைக் குறைகூறுதல் மனிதப் பண்பில்லையாம்’. ‘அரசியல் நாகரீகம்’ எனும் பட்டாடைக்குள் ஒளிந்து கொண்டிருப்பதால், இந்த அரசியல் பிழைப்புவாதத்தைப் பலர் அடையாளம் காண்பதில்லை.

1991 மே 21 அன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் தாக்கப்பட்டார்கள். 2 இலட்சம் திமுகவினரின் உடைமைகள் எரிக்கப்பட்டன. ராஜீவுக்காக கண்ணீர் சிந்துமாறு தமிழகமே அச்சுறுத்தப்பட்டது. அன்று தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கண்ணீர் விட்டவர்கள் இன்றும் ஈழத்தமிழ் மக்களுக்காக கண்ணீர் விடுகிறார்கள் – இதுவும் ஒரு வகை அரசியல் நிர்ப்பந்தம்தான். பிரணாப் முகர்ஜி கலைஞர் சந்திப்புடன் தமிழகத்தின் “கண்ணீர் விடும் போராட்டம்” முடிவுக்கு வருகிறது. ஈழத்திலோ அழுவதற்கு கண்ணீர் வற்றிய நிலையில் அவலம் தொடர்கிறது.

இனியும் கண்ணீர் விடுவதை யாரேனும் தொடர்ந்தால் அது தீவிரவாத நடவடிக்கையாகக் கருதப்படும். அவர்களுக்கெதிராக ராஜீவின் ஆவியோ, ராஜத்துரோகச் சட்டமோ ஏவப்படலாம்.

அன்று தமிழகமே கண்ணீர்க் கடலில் அமிழ்த்தப்ப்பட்ட சூழ்நிலையில், தமிழகத்திலிருந்து வெளிவரும் புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் ஆகிய இரு இதழ்கள் மட்டுமே எதிர்ப்புக் குரல் எழுப்பின. அதன் விளைவாக போலீசின் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டன. “இவர்கள் ராஜீவுக்காக அழமாட்டார்கள்” என்ற தலைப்பில் ஜூன் 1991 புதிய கலாச்சாரம் இதழில் வெளியான உரைவீச்சினை இங்கே பதிவு செய்கிறோம்.

80 களுக்குப் பின் பிறந்த இளைய தலைமுறை அந்த வரலாற்றை அறிந்து கொள்ளவும், மீண்டும் மீண்டும் அரங்கேறும் கேலிக்கூத்துகளை பழைய தலைமுறை புரிந்து கொள்ளவும் இது உதவக் கூடும்

இவர்கள் ராஜீவுக்காகன்அழமாட்டார்கள்!

பரோவா. எகிப்திய மன்னன்.
தான் இறந்தவுடன் தனது பட்டத்தரசியையும்,
ஆசை நாயகிகளையும், மந்திரிப் பிரதானிகளையும்,
தனது ஆடை ஆபரணங்களையும்,
பொக்கிஷங்களையும், அடிமைகளையும்
தன்னுடன் சேர்த்துப் புதைக்கச் சொன்னான் அந்த மன்னன்.
பூவுலக வாழ்வைச்
சுவர்க்கத்திலும் தொடரவேண்டுமென்பது அவன் ஆசை.
ஆசை நிறைவேற்றப்பட்டது.
பிறகு அவனுடைய வாரிசுகளும்
அவனைப் போலவே ஆசைப்பட ஆரம்பித்தார்கள்.
அவர்களுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.
இது பொய்யல்ல, புனை கதையல்ல – வரலாறு;
சாட்சி – எகிப்திய பிரமிடுகள்.

ராஜீவின் இறுதி ஆசையைப் பற்றி நமக்குத் தெரியாது.
ஒருவேளை
பரோவாவைப் போல ராஜீவும் ஆசைப்பட்டிருந்தால்,
நாமே அதை முன்னின்று நிறைவேற்றியிருக்கலாம்.
சிதைந்து, அழுகி நாட்டின் அரசியல் பண்பாட்டு அரங்கில்
நாற்றத்தையும், நோயையும் பரப்பியபடி
இறக்கவிருக்கும் காங்கிரசு என்னும்
அருவெறுக்கத்தக்க மிருகத்தை
அவ்வாறு அடக்கம் செய்ய வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

ஒரு வகையில் பரோவா நல்லவன்.
தனது அதிகாரக் குடையின் நிழலில் ஆட்டம் போட்டவர்கள்
தன்னுடன் சேர்ந்து அடங்குவதே நியாயம்
என்று கருதியிருக்கிறான் போலும்!
தன்னுடன் குடிமக்களையும் சேர்த்துப் புதைக்குமாறு
அவன் உயில் எழுதவில்லை;
ஊரைக் கொளுத்திவிடுமாறு
உத்தரவிட்டதாகத் தகவல் இல்லை.

ராஜீவின் இறுதி ஆசையைப் பற்றி நமக்குத் தெரியாது.
ஆனால், பீரங்கி வண்டியில் ராஜீவின் உடல் ஏறுமுன்னே
நாடெங்கும் பல அப்பாவிகளின் பிணங்கள்
பச்சை மட்டையில் ஏறியது தெரியும்.
ராஜீவின் சிதைக்கு ராகுல் தீ மூட்டும் முன்னே
‘தொண்டர்கள்’ ஊருக்குத் தீ மூட்டியது தெரியும்.
மறைந்த தலைவனுக்கு மரியாதை செய்யுமுகந்தான்
ஊரைச் சூறையாடியது தெரியும்.

இருப்பினும் பேசக்கூடாது.

மரித்தவர்களைக் குறை கூறுதல் மனிதப் பண்பல்ல;
கருணாநிதியைக் கேளுங்கள் விளக்கம் சொல்வார்.
இருபத்தொன்றாம் தேதி இரவு 10.19 வரை
“ஆட்சியைக் கவிழ்த்த சூழ்ச்சிக்காரன்,
கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிய கொள்ளைக்காரன்,
அக்கிரகாரத்தின் ஆட்சிக்கு அடிகோலும்
அவாளின் ஆள்”
ஆனால் 10.20-க்குப் பின் அமரர்,
அமரரைப் பழித்தல் தமிழ்ப் பண்பல்ல.
பாவத்தின் சம்பளம் மரணம்.
பாவமேதும் செய்யாதிருந்தும்
‘சம்பளம்’ பெற்றவர்கள் பற்றி….?

பேசக்கூடாது. இது கண்ணீர் சிந்தும் நேரம்.
உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.
ஆனால், கண்ணீர் சிந்தும் விஷயத்தில்
கருத்து வேறுபாடுகளை அனுமதிக்க இயலாது.
கண்ணீர் சிந்துங்கள். இல்லையேல்
கண்ணீர் சிந்த நேரிடும்.

சிரிக்காவிட்டால், சிறைச்சாலை;
கைதட்டாவிட்டால் கசையடி – இட்லரின்
ஆட்சியில் இப்படி நடந்ததாகக்
கேள்விப்பட்டிருக்கிறோம்.
அது பாசிசம்.

பேசாதே என்றால் பொறுத்துக் கொள்ளலாம்!
சிரிக்காதே என்றால் சகித்துக் கொள்ளலாம்,
அழாதே என்றால் அடக்கிக் கொள்ளலாம்.
ஆனால்
‘அழு‘ என்று ஆணை பிறப்பித்தால் அழ முடியுமா?
அச்சத்தில் பிரிவது சிறுநீர். கண்ணீரல்ல.
அடிமைச் சாம்ராச்சியத்தின் அதிபதி
பரோவா கூடத் தன் அடிமைகளுக்கு
இப்படியொரு ஆணை பிறப்பித்ததில்லையே!

ஆத்திரத்தையும் அழுகையையும் மட்டுமே
தன் மக்களுக்குப் பரிசாகத் தந்த
ஆட்சியாளனின் மறைவுக்கு
ஏன் கண்ணீர் சிந்த வேண்டும்?
அரசியல் சட்டக் காகிதங்களில் மட்டுமே இருந்த
உயிர் வாழும் உரிமையும்
தன் குடிகளுக்குத் தேவையில்லை என்று
கிழித்தெறிந்த கொடுங்கோலனின்
உயிர் பிரிந்ததற்காக
எதற்குக் கண்ணீர் சிந்த வேண்டும்?
இப்படியெல்லாம் கேட்கத்
தெரியாமலிருக்கலாம் மக்களுக்கு.
இருப்பினும் அவர்கள் கண்ணீர் சிந்தவில்லை.

புகழ் பெற்ற நான்கு உபாயங்களைத்
தலைகீழாகவே பயன்படுத்திப் பழகிய
எதிரிகள் – காங்கிரசுக்காரர்கள்
நான்காவது ஆயுதம் – தண்டம் -
தோற்றவுடனே மூன்றாவது ஆயுதத்தை
பேதம் – ஏவினார்கள். வீதிகள் தோறும்
சுடுகாடுகள். பயனில்லை. இரண்டாவது
ஆயுதம் – தானம் – பிரயோகிக்கப்பட்டது.
கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்
ஒலிபெருக்கிகளில் ஒப்பாரி வைத்தது.
மக்கள் கண்ணீர் சிந்தக் காணோம்.
முதல் ஆயுதம்
வன்மத்துடன் களத்தில் இறங்கியது.

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும்
வண்ணச் சுடுகாடு,
கறுப்பு வெள்ளைச் சுடுகாடு;
வானொலியில் முகாரி;
பத்திரிக்கைகளில் இரங்கற்பா…
“பார்… பார்… சிரித்த முகத்துடன்
எங்கள் தலைவனைப் பார்!
சூது வாது தெரியாமல்
மாலைக்குத் தலை நீட்டிய மன்னவனைப் பார்!
மக்களைத் தழுவ விரும்பியவன்
மரணத்தைத் தழுவிய கொடுமையைப் பார்!
அன்பு மனைவியும் அருமைச் செல்வங்களும்
அநாதையாக நிற்பதைப் பார்!
அமெரிக்க அதிபர் அழுகிறார்; ரசிய அதிபர் அழுகிறார்;
உலகமே அழுகிறது.
நீ மட்டும் ஏன் அழ மறுக்கிறாய்?
அழு… அழு…!”

அழுதார்கள்; அழுதீர்கள். அழுது
முடித்துவிட்டு அடுத்த வேலையைப்
பார்க்கலாம் என்று நகர்வதற்கு
இது ‘பாசமலர்’ அல்ல;
நீங்கள் அழுத பின்னால் அடுத்த வேலையை
அவர்கள் தொடங்குவார்கள்.
அவர்கள் கண்ணீரைக் கனியவைத்து
வாக்குகளாக்கும் ரசவாதிகள்.
உங்கள் கண்ணீர்த் துளிகளை மூட்டம்
போட்டிருக்கிறார்கள்.
காலம் கடந்துவிடவில்லை. கொஞ்சம்
சிந்தித்துப் பாருங்கள்.
இறந்தவரெல்லாம் நல்லவரென்றால்
இட்லரும் நல்லவனே.
கொலையுண்டவர்கள் எல்லாம் கோமான்களென்றால்
கொடுங்கோலன் என்ற சொல்லுக்கு
அகராதியில் இடமில்லை.


நினைவிருக்கிறதா? இப்படித்தான்,
இப்படியேதான் நடந்தது
ஏழு ஆண்டுகளுக்கு முன்பும்.
கையில் கொள்ளியுடன்
தாயின் பிணத்தருகே தலைமகன்
உங்கள் வாக்குகளைக் கொள்ளையிட்டான்.
அந்த ஐந்தாண்டு அரசாட்சியைக் கொஞ்சம்
அசை போட்டுப் பாருங்கள்!

இந்த நேரு குலக்கொழுந்து, அபூர்வ சிந்தாமணி
அரியணை ஏறும்போதே
ஐயாயிரம் தலைகளைக் காவு வாங்கியதே
மறந்து விட்டீர்களா?
குப்பை கூளங்களைப் போல
அப்பாவிச் சீக்கியர்களின் உடல்கள்
குவித்து வைத்துக் கொளுத்தப்பட்டனவே!
அவர்களது சாம்பலுக்கு
அஸ்திக்கலசமும் திரிவேணி சங்கமமும் வேண்டாம்;
ஆறுதலாக ஒரு வார்த்தை…
சொன்னதா அந்த அரசு?

ஐயாயிரம் கொலைகள் – ஐம்பதாயிரம் அகதிகள்.
அகதிகள் பெரும்பான்மையோர்
கைம்பெண்கள், குழந்தைகள்.
பிழைப்பதற்காகச் சொந்த மண்ணை விட்டு வந்து
வியர்வையும், ரத்தமும் சிந்தி
ஆசையாகக் கட்டி வளர்த்த வாழ்க்கையை
ஒரே நாளில்
குதறி எறிந்தன காங்கிரசு மிருகங்கள்.
நீதி கிடைக்கும் நிவாரணம் கிடைக்கும் என
ஏழு ஆண்டுகள் காத்திருந்து
குழந்தைகளையும், துயரத்தையும் மட்டுமே சுமந்து
சொந்த மண்ணுக்குத் திரும்பினார்கள்
அந்த இளம் விதவைகள்.
இன்று சோனியாவுக்காகக் கண்ணீர் சிந்துபவர்கள்
இவர்களுக்கு என்ன பதில் சொல்கிறார்கள்?
கேளுங்கள்.

இந்திராவின் கொலையாளியைக் கண்டுபிடித்துத்
தூக்கிலேற்றியாகி விட்டது.
ஐயாயிரம் கொலைகளுக்கு
எத்தனை பேர் தண்டிக்கப்பட்டனர்?
தண்டிப்பது கிடக்கட்டும்; கொலையாளிகளைக்
கண்டுபிடிக்க கூட முடியாது என்று
கைவிரித்தார் ராஜீவ்.
நாடே காறி உமிழ்ந்த பின்
ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது.
“கண்டு பிடிக்க முடியவில்லை” –
கமிஷனும் அதையே சொல்லியது.

தூக்கிலேற்றப்பட வேண்டிய பிரதான குற்றவாளிகள்
ராஜீவின் தளகர்த்தர்கள் –
எச். கே. எல். பகத், ஜகதீஷ் டைட்லர்.
இன்று சோனியாவைப் பிரதமராக்க விழையும்
ராஜீவின் நண்பர்கள்.
அடுக்கடுக்காய் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன;
விளைவு, குற்றம் சாட்டியவர்களுக்குக்
கொலை மிரட்டல் வந்தது.
கமிஷன் கண்டுபிடித்த ஒன்றிரண்டு
கொலைகாரர்களின் பெயர்களையும்
அரசாங்க ரகசியமாக்கி
ஆணை பிறப்பித்தார் ராஜீவ்.

“இந்திரா நினைவு நாளோ,
குடியரசு தினமோ, சுதந்திர தினமோ எது வந்தாலும்
எங்களுக்கு நடுக்கமாக இருக்கிறது.
மீண்டும் தாக்கப்படுவோமோ என்று அச்சமாக இருக்கிறது.
அவர்கள் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டாம்;
“வருந்துகிறோம் என்று ஒரு வார்த்தைகூட
இன்று வரை அவர்கள்
வாயிலிருந்து வரவில்லையே”
அங்கலாய்த்தாள் ஒரு இளம்விதவை.

குடிமக்கள் நலம் பேணும் கொற்றவன் –
ராஜீவ் சொன்னார்.
“மரம் விழுந்தால் மண் அதிரத்தான் செய்யும்”.
சொன்ன மரமும் இப்போது விழுந்துவிட்டது.
டில்லி மாநகரமே கண்ணீர் விட்டுக்
கதறியது என்கிறார்களே,
அந்தச் சீக்கியப் பெண்களின்
கண்கள் கலங்கினவா என்று
விசாரித்துப் பாருங்களேன்.

போபால். இந்திய வரலாற்றின் மறைக்க முடியாத
தேசிய அவமானம்.
ராஜீவ் பதவிக்கு வந்தவுடனே
நடைபெற்ற பயங்கரப் படுகொலை.
ஒரே இரவில் பத்தாயிரம் பேரைப் பிணங்களாகவும்,
ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட உழைப்பாளி மக்களை
நடைப்பிணங்களாகவும் ஆக்கிய குண்டு வெடிப்பு;
அமெரிக்க இராணுவத்தின் விஷவாயுக் குண்டுக்கு
இந்தியாவில் நடத்திப் பார்த்த சோதனை.

இல்லை. உங்கள் நாட்டுத்
தொழிலாளிகளின் அலட்சியத்தால்
நேர்ந்த விபத்து இது என்றது
யூனியன் கார்பைடு.

ஆமோதித்தது ராஜீவ் அரசு.
“விஷ வாயுவைத் தயாரிக்க
உனக்கு உரிமம் கொடுத்தது யார்?” என்று
சீறினார்கள் இந்திய விஞ்ஞானிகள்.
காங்கிரசை ஓரக்கண்ணால் பார்த்துச்
சிரித்தது கார்பைடு.
ஆத்திரம் கொண்டு அமெரிக்க முதலாளிகளைத்
தாக்கத் துணிந்தது மக்கள் கூட்டம்.
முதலாளிகளுக்கு அரணாய் நின்றது
ராஜீவ் அரசு.

நீதி எங்கே, நிவாரணம் எங்கே என
அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்கு
தொடர்ந்தனர் மக்கள். நீதி கேட்பதும்,
நிவாரணம் பெறுவதும் “நீங்கள் தேர்ந்தெடுத்த”
எங்கள் அரசின் உரிமை என்று
அதையும் பிடுங்கிக் கொண்டது ராஜீவ் அரசு.
அந்தச் சுடுகாட்டின் நடுவில்
ஒரு சொர்க்கபுரியை நிறுவி
அதில் கவியரங்கம் நடத்தியது;
களியாட்டம் போட்டது.

ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன.
இறந்தவர்கள் மறக்கப்பட்டார்கள்.
இருப்பவர்களோ குருடரானார்கள், முடமானார்கள்.
பிறப்பவையும் சப்பாணிகள், சதைப் பிண்டங்கள்.
போபால் அழுது கொண்டிருக்கிறது.
அதன் கண்ணீருக்கு ராஜீவின்
மரணம்தான் காரணமோ?
கேட்டுத்தான் பாருங்கள்.

பதில் சாட்டையாய் உரிக்கும் – அது ராஜீவின்
மரணம் தோற்றுவித்த கண்ணீரல்ல,
துரோகம் தோற்றுவித்த கண்ணீர்.

ஆனால், ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வெடித்தவுடனே
வெடிக்கிறார்கள் காங்கிரசுக்காரர்கள்.
“நன்றி கொன்றவர்கள், எங்கள் தலைவனைக்
கொன்று விட்டார்கள்! நயவஞ்சகர்கள்,
முதுகில் குத்திவிட்டார்கள்!
ஒவ்வொருவரையும் சோதனை போடுங்கள்!
எல்லோரையும் விரட்டுங்கள்!
ஈழத்தமிழன் எவனையும் நம்ப முடியாது!”
ஈழத் தமிழினத்திற்குத் துரோகத் தமிழினம்
என்று பெயர் சூட்டுகிறார்கள்.

யார் துரோகி? எவன் நயவஞ்சகன்?
விடுதலைப் போராளிகளைக்
கூலிப் பட்டாளமாக உருமாற்றியது யார்?
ஆதரவுக் கரம் என்று நம்பியவர்கள்
மத்தியிலே ஐந்தாம் படையை
உருவாக்கியது எந்தக் கை?
முகத்தில் சிரிப்பும், கைகளில் இனிப்புமாக
வரவேற்ற ஈழத்தைப் பெண்டாள முனைந்தது
யாருடைய ஆட்சி?
புறாக்களைக் காட்டி ஏமாற்றிக்
கழுகுகளைப் பறக்கவிட்டு அமைதியை
நிலைநாட்டியது யாருடைய படை?
“ஆத்தாள் சிக்கிம் வென்றாள், மகன்
ஈழம் கொண்டான்” என்று
கல்வெட்டில் பொறித்துக் கொள்வதற்காக
பாக். ஜலசந்தியில் குறுக்கு மறுக்காக
அடித்து விளையாட
ஈழத்தமிழன் என்ன பூப்பந்தா?

எது துரோகம்? யார் துரோகிகள்? ஆனந்த
பவனத்திலும், சத்தியமூர்த்தி பவனத்திலும்
பொருள் கேட்காதீர்கள்.
யாழ்ப்பாண மக்களிடம் கேளுங்கள்.
துரோகம் என்ற
சொல்லின் பொருள் ராஜீவ் என்பார்கள்;
வங்காள தேசத்தில் கேளுங்கள் – இந்திரா
என்று விளக்குவார்கள்;
பஞ்சாபில் விசாரித்துப் பாருங்கள் – மோகன்தாஸ்
கரம்சந்த் என்று வரலாறு சொல்வார்கள்
பகத்சிங்கின் வாரிசுகள்.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, கரம்சந்த் காந்தி –
ஒரே சொல்லுக்கு
ஒவ்வொரு இடத்திலும் ஒரு பொருள்!
ஆனால், வேற்றுமையிலும் ஒரு ஒற்றுமை -
துரோகம் என்றால் காந்தி!
சோரத்தில் பிறந்து
துரோகத்தில் வளர்ந்த தங்கள் கட்சித்
தலைவனுக்காக உங்களைக்
கண்ணீர் சிந்தக் கோருகிறது.
சிந்தியுங்கள்!

தள்ளாத வயதில் ‘தலாக்’ என்று
கணவனால் தள்ளிவைக்கப்பட்ட ஷாபானு
என்ற முசுலீம் பெண்ணைக் கேளுங்கள்.
தான் போராடிப் பெற்ற நீதியை ஒரே நொடியில்
ராஜீவ் கொன்று புதைத்த கதையைச் சொல்வாள்.
திமிர் பிடித்த கணவனுடனும்,
வெறி பிடித்த முல்லாக்களுடனும்
சேர்ந்து கொண்டு ராஜீவ் தனக்கிழைத்த
கொடுமையைச் சொல்லி அழுவாள்.
ஊன்றிக் கவனியுங்கள்.
அவள் மட்டுமல்ல; பர்தாவுக்குள்ளே
முகம் புதைத்த இசுலாமியப் பெண்கள் பலர் விசும்புவதும்
கேட்கும்.

அயோத்தி நகர மக்களைக் கேளுங்கள்.
அவர்கள் சீந்தாமல் ஒதுக்கி வைத்த
பாபர் மசூதிப் பிரச்சினையை
ராஜீவ் தூண்டிவிட்ட கொடுமையைச்
சொல்லி அழுவார்கள்.
அருண் நேருவிடம் தனியே
விசாரித்துப் பாருங்கள். கோர்ட்டில்
உறங்கிக் கிடந்த வழக்கைத் தூசு தட்டி எடுத்து
மசூதியின் பூட்டைத் திறந்துவிட்டு
‘இந்து’ ஓட்டைப் பிடிக்கத்
தானும் ராஜீவும் போட்ட திட்டத்தைக்
குதூகலமாய் வர்ணிப்பார்.

ராஜீவின் உடலடக்கத்திற்கு வந்திருந்த
அமிதாப்பையும் வராத இந்துஜாவையும்
கேட்டுப் பாருங்கள்.
பீரங்கிப் பேரக் கமிஷனை ஒளிக்க
‘உடுக்கை இழந்தவன் கை போல’ வந்து உதவிய
திருவாளர் பரிசுத்தத்தை நாவாரப் புகழ்வார்கள்.

கவச குண்டலம் போல ராஜீவை
விட்டுப் பிரியாதிருந்த அவரது
மெய்க்காவலர்களைக் கேளுங்கள்;
தண்டி யாத்திரை என்ற பெயரில்
ராஜீவ் நடத்திய கோமாளிக் கூத்தைச்
சொல்லிச் சிரிப்பார்கள்;
துப்பாக்கியைச் சட்டைக்குள் ஒளித்து
கதர்க்குல்லாய் மாட்டிக் கொண்டு
காங்கிரசுத் தியாகிகளாகத் தாங்கள் அவதாரம்
எடுத்ததைச் சொல்வார்கள்; ஒருமைப்பாட்டு ஓட்டத்தில்
தாங்களும் விளையாட்டு வீரர்களாக உருமாறி
ஓடிய கதையைச் சொல்வார்கள்.

ராஜீவின் பாதம் பட்ட இந்திய நகரங்களின்
மக்களைக் கேளுங்கள்.
அவரது பாதுகாப்பை உத்தேசித்துச்
சிறையிலடைக்கப்பட்ட தொழிலாளிகளை,
நடைபாதை வியாபாரிகளை, இளைஞர்களை
ஆயிரக்கணக்கில் அடையாளம் காட்டுவார்கள். அவர்களில்
எத்தனைப் பேர் ராஜீவின் மரணத்திற்காகக்
கண் கலங்கினார்கள் என்று கேட்டுத்
தெரிந்து கொள்ளுங்கள்.

மணி சங்கர் ஐயர், சுமன் துபே, ராஜீவ் சேத்தி,
சாம் பித்ரோடா, சதீஷ் சர்மா, எம். ஜே. அக்பர்… ராஜீவின்
நண்பர்களாகவும், ஆலோசகர்களாகவும்
இருந்த இந்த மேட்டுக்குடிக்
குலக் கொழுந்துகளைக் கேளுங்கள்.
கலாச்சாரத் திருவிழா, கம்ப்யூட்டர் மயமாக்கல்,
இருபத்தொன்றாம் நூற்றாண்டை விரட்டிப் பிடித்தல் -
எத்தனை கனவுகள்!
இதமான மாலை நேரங்களிலும், கிளர்ச்சியூட்டும்
பின்னிரவுகளிலும் நட்சத்திர விடுதிகளில் அமர்ந்து
இந்தியாவின் எதிர்காலத்தைத் திட்டமிட்டதை
அவர்கள் நினைவு கூறுவார்கள்.
அவர்களது கண்கள் பனித்திருக்கும் –
பிரிவாற்றாமையினால் அல்ல;
தங்களின் எதிர்காலம் இருண்டு விடுமோ
என்ற அச்சத்தினால்.

எதை நினைவுபடுத்துவது? எதை விடுவது?
ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில்
இத்தனை அநீதிகளை
இழைக்க முடியுமா?
அதிர்ச்சியாயிருக்கிறது.
கொடுங்கோன்மைக்கு இரையானவர்கள்
கோடிக்கணக்கானோர்,
வகைக்கு ரெண்டு எழுதினால் கூட
வளர்ந்து கொண்டே போகிறது.

இன்னும் சொற்களில் அடக்க முடியாத
சோகங்களைக் காண வேண்டுமெனில்
காஷ்மீருக்கும் பஞ்சாபுக்கும்
அஸ்ஸாமிற்கும் சென்று பாருங்கள்.
இறந்தவர்கள் கதையை நான் கூறலாம் –
இன்னும் உயிரோடிருப்பவர்களை
நீங்களே விசாரித்தறியலாம்.
கருப்பு வெள்ளையில்
அச்சாகிக் கிடக்கும் வரலாற்றைப்
புரட்டிப் பார்க்கலாம்.
எதுவும் இயலாவிட்டால் உங்கள்
வாழ்க்கையையே உரைத்துப் பார்க்கலாம்.

அதன் பிறகு முடிவு செய்யலாம் – ராஜீவின் மரணத்திற்குக்
கண்கலங்குவது சரியா என்று!

புதிய கலாச்சாரம் – ஜூன் 1991 (அனுமதியுடன்)

0 comments:

Post a Comment